டில்லி
இந்தியாவுக்கு ஆப்கான் விவகாரத்தால் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதால் அங்கு கடும் பதற்றம் நிலவுகிறது. அங்கு வசிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இன்று டில்லியில் இது குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் நடந்துள்ளது.
இந்த கூட்டத்தில், ஆப்கான் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு, இந்தியா எதிர்கொள்ள உள்ள சவால்கள் குறித்து வெளியுறவுத்துறைச் செயலர் விளக்கினார். இந்தியாவும் தாலிபான் விவகாரத்தில் மற்ற நாடுகளைப் போல, உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது குறித்தும், அந்நாட்டின் தற்போதைய சூழல் குறித்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கூட்டத்தில் திமுக சார்பில் திருச்சி சிவா, டி.ஆர்.பாலு ஆகியோரும், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, இன்றையக் கூட்டம் திருப்திகரமாக அமைந்ததாகக் கூறினார். ஆப்கான் விவகாரத்தால் இந்தியாவுக்குப் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படவில்லை என இன்றைய கூட்டத்தில் மத்திய அரசு தரப்பில் விளக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.