டில்லி
நாடாளுமன்றத்தில் மணிப்பூர் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் விசாரிக்க மத்திய அரசு தயாரக உள்ளதாக அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
நாளை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இன்று டில்லியில் மத்திய அரசு அனைத்துக் கட்சிகள் கூட்டம் ஒன்றை நடத்தியது. கூட்டத்தில் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் தனது உரையில்;,
“மழைக்கால கூட்டத் தொடரில் விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட மற்றும் சபாநாயகரால் அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு பிரச்சினை குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. குறிப்பாக, எதிர்க்கட்சிகளால் அடிக்கடி எழுப்பப்படும் மணிப்பூர் விவகாரம் குறித்தும் அரசு விவாதிக்கத் தயார். இந்த கூட்டத் தொடரில் 32 மசோதாக்கள் தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது”
என்று தெரிவித்தார்.
ஏற்கனவே காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் ,
“வரக்கூடிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனும் கோரிக்கையை முதலில் எழுப்புவோம். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அரசு எத்தகைய வியூகத்தைக் கொண்டிருக்கிறது என்பது குறித்து பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துவோம்.”
எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.