டில்லி

ந்தியாவில் சமையல் எண்ணெய் விலையைக் குறைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு இட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக உலகெங்கும் சமையல் எண்ணெய் விலை அதிகரித்துக் காணப்பட்டது.   இந்நிலையில் சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் தயாரிப்பிற்கான மூலப் பொருட்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது.  எனவே அவற்றின் விலை பல நாடுகளில் குறைந்துள்ளன.

இதையொட்டி சமையல் எண்ணெய் சில்லறை விற்பனை விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்ற ஆண்டு இந்தியா ரூ.1.57 லட்சம் கோடி மதிப்புள்ள சமையல் எண்ணெய்யை இறக்குமதி செய்தது.  இதில் மலேசியா, இந்தோனேசியாவிலிருந்து பாமாயில்,பிரேசில், அர்ஜெண்டினாவில் இருந்து சோயா எண்ணெய்யும் இறக்குமதி ஆகிறது.    டில்லியில் சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உணவு துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா,‘‘ சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலைகள் குறைந்துள்ளதால் சமையல் எண்ணெய் சில்லறை விற்பனை விலையைக் குறைக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார். இதையொட்டி தாரா பிராண்ட் சமையல் எண்ணெய் தயாரித்து வினியோகிக்கும் மதர் டைரி நிறுவனம் வெளியிட்டுள்ள  அறிக்கையில், எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை குறைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.