டில்லி

மாநில அரசுகள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை ஜூன் 30 வரை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு அடைந்துள்ளது.  நேற்றுவரை இந்தியாவில் 2.75 கோடிக்கும் மேல் பாதிப்பு அடைந்து அதில் சுமார் 3.19 லட்சம்  பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்றுவரை 2.49 கோடி பேர் குணம் அடைந்து 23.27 லட்சம் பேருக்கு இன்னும்  பாதிப்பு உள்ளது.

இதையொட்டி நாடெங்கும் கொரோனா விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.   இதற்கான விதிமுறைகள் கடந்த ஏப்ரல் 29 அன்று வெளியிடப்பட்டது.    நேற்று ஜூன் மாத நிலவரம் குறித்து மத்திய உள்துறைச் செயலர் அஜய் பல்லா அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒரு அறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில், “இந்தியாவில் கொரேனாவால் பாதிக்கப்பட்டோர் உள்ள பகுதியைத் தனிமைப் படுத்துவது, சிகிச்சைக்குத் தேவையான ஆக்சிஜன், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களைத் தடையின்றி விநியோகம் செய்வது போன்ற நடவடிக்கைகளால், கொரோனா பரவல் குறைந்துள்ளது.  இருந்தாலும் பாதிக்கப்பட்டோர் விகிதம் அதிகமாக உள்ளது.

 ஆகவே ஏற்கனவே அறிவித்த கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளைஜூன், 30 வரை கட்டாயம் பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது.  அந்தந்த மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள்  உள்ளூர் பாதிப்பு நிலவரத்தை ஆராய்ந்துவிதிமுறைகளை படிப்படியாகத்  தளர்த்துவது குறித்துஉரிய நேரத்தில் முடிவு செய்யலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.