டில்லி
கொரோனா மீண்டும் அதிக அளவில் பரவி வரும் 12 மாநிலங்களில் 5 அம்ச திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதையொட்டி இம்மாநில உயர் அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறைச் செயலர் ராஜேஷ் பூஷன் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளார்.
அந்த கூட்டத்தில் ராஜேஷ் பூஷன், “சென்ற வருடம் மே மாதத்துடன் ஒப்பிடுகையில், தற்போது வாராந்திர பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை வேகமாக உயர்ந்துள்ளது. குறிப்பாகக் கடந்த ஒரு மாதத்தில் பதிவான பாதிப்புகளில், 71 சதவீதம், குறிப்பிட்ட 46 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளது. அத்துடன், 69 சதவீத பலியும், இந்த மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளது.
பாதிப்பு அதிக அளவில் உள்ளவற்றில் 25 மாவட்டங்கள் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவை தவிர. குஜராத்தில், நான்கு, ஹரியானா மற்றும் தமிழகத்தில், தலா, மூன்று மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளன. இந்த பகுதிகளில் ஐந்து அம்ச திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
அதாவது பரிசோதனைகளை அதிகரித்தல், தனிமைப் படுத்துதல், பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடித்தல், போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல், பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கட்டாயப்படுத்தல் ஆகியவை செய்யப்பட வேண்டும். மேலும் தடுப்பூசி வழங்குவதையும் அதிகரிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.