டில்லி,
தொழிலாளர்களுக்கு ரொக்க சம்பளம் கிடையாது, வங்கிகள் மூலமே சம்பளம் வழங்க வகை செய்யும் வகையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
தொழிலாளர்களுக்கான சம்பளம் வங்கிக் கணக்கு மற்றும் காசோலை மூலம் வழங்குவது கட்டாயமாக்கப்பட உள்ளது. இதற்காக விரைவில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.
ஏற்கனவே நோட்டு செல்லாது என்ற பிரச்சினையால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். அதை தொடர்ந்து தங்கத்துக்கு கட்டுப்பாடு என்று அறிவித்தது. இதன் காரணமாக பெண்கள் கொதித்துப் போய் உள்ளனர்.
தற்போது தொழிலாளர்களுக்கு சம்பளம் ரொக்கமாக கொடுக்கப்பட மாட்டாது என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளார் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர்.
நேற்று தெலங்கானா மாநிலத்தில் வங்கி அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த தகவலை தெரிவித்தார்.
சம்பள விஷயத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் தொழிலாளர்களை ஏமாற்றி வருகிறது. இதை தடுக்க புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்று கூறினார். மேலும், சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கு முன் அரசாணை பிறப்பிக்கப்படும் என்றும், இதன் பிறகு தொழிலாளர் சம்பளங்கள் ரொக்கமாக வழங்கப்படாது, அதற்கு பதில் காசோலையாகவோ அல்லது வங்கிகளில் நேரடியாக செலுத்தும் முறை விரைவில் கொண்டு வரப்படும் என்றார்.
ஊதிய விஷயத்தில் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க இந்த நடைமுறை மிகவும் அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஆனால், ஏழை தொழிலாளர்கள், தங்களின் அன்றாட தேவைக்கு சம்பளம் ரொக்கமாக வழங்கினால் மட்டுமே சரியாக இருக்கும் என்று கூறுகின்றனர்.