அகமதாபாத்
பொருளாதார மந்தநிலையால் மத்திய அரசு திவால் விளிம்புநிலையில் நிற்பதாக முன்னாள் பாஜக அமைச்சர் யஷ்வந்த் சின்கா கூறி உள்ளார்.
முந்தைய பாஜக அரசில் கடந்த 1998 முதல் 2002 வரை நிதி அமைச்சராக பணி புரிந்து வந்த மூத்த பாஜக தலைவர் யஷ்வந்த் சின்கா தொடர்ந்து தற்போதைய பாஜக அரசை குறை கூறி விமர்சனம் செய்து வந்தார். அத்துடன் அவர் பாஜகவை விட்டு விலகினார். தற்போது எந்தக் கட்சியிலும் சேராமல் உள்ள யஷ்வந்த் சின்கா மத்திய அரசு குறித்த தனது கருத்துக்களை அவ்வப்போது தொடர்ந்து கூறி வருகிறார்.
பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு உள்ளிட்டவற்றை எதிர்த்து யஷ்வந்த் சின்கா காந்தி சாந்தி யாத்திரை என்னும் பயணத்தை நடத்தி வருகிறார். அந்த பயணம் அகமதாபாத் நகரை அடைந்துள்ளது. அங்கு மக்களிடையே யஷ்வந்த் சின்கா உரையாற்றினார்.
அவர் தனது உரையில், “தற்போது மத்திய அரசு பொருளாதார அடிப்படையில் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஆனால் அந்த பிரச்சினைகளைக் கண்டுக் கொள்ளாமல் அரசு அனைத்தும் சரியாக உள்ளதாகத் தவறான புள்ளிவிவரங்களைக் காட்டி வருகிறது. ஆனால் அந்த தவறான புள்ளி விவரங்களை எப்போதும் காட்ட முடியாது. இனி அவர்கள் பிரச்சினைகள் உள்ளதை ஒப்புக் கொண்டு அதற்காக என்ன செய்ய உள்ளனர் என்பதைக் கூற வேண்டும்.
மத்திய அரசு தன்னிடம் உள்ள அனைத்து நிதி ஆதாரங்களையும் இஷ்டப்படி செலவு செய்துள்ளது. இதனால் அரசு தற்போது திவாலாகும் விளிம்பு நிலைக்கு வந்துள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு செலவு செய்ய வேண்டும் எனப் பலரும் கூறி வரும் வேளையில் அரசு செலவைக் குறைப்பது குறித்துப் பேசி வருகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு தனியார் முதலீடுகள் வெகுவாக குறைந்து தற்போது பூஜ்ஜியம் என்னும் நிலைக்கு வந்துள்ளது.
இந்த பொருளாதார மந்த நிலை அனைத்து துறைகளிலும் உள்ளது. உதாரணமாகப் போக்குவரத்துத் துறையில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அது சிறிது சிறிதாக அதிகரித்து உற்பத்தித் துறை முழுவதுமாக முடங்கி உள்ளது. வர உள நிதிநிலை அறிக்கை மிகவும் கடுமையாக இருக்கும்.
கடந்த முறைகளில் இல்லாத அளவுக்கு 13 நிதி நிலைக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்களைப் பிரதமர் மோடி நடத்தி உள்ளார். முன்பு இத்தகைய கூட்டங்களை நிதி அமைச்சர்கள் நடத்தி வருவார்கள். இதற்குக் காரணம் பொருளாதார மந்த நிலை ஆகும். அதை மறைக்க அரசு குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கையில் எடுத்துள்ளது. அத்துடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய குடியுரிமை பதிவேட்டை நாடெங்கும் அமல்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவை இரண்டுமே மத அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் திட்டங்கள் ஆகும். ” எனத் தெரிவித்துள்ளார்.