டில்லி
மத்திய அரசு சிறுவர்களுக்கான தடுப்பூசி விலை குறித்து உற்பத்தியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
தற்போது இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளாக கோவாக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக் வி உள்ளிட்ட தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. விரைவில் கொரோனா மூன்றாம் அலை பரவல் உண்டாகும் எனவும் இந்த அலையில் சிறுவர்கள் அதிக அளவில் தாக்கப்படலாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு 12 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடத் திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசு இதற்கான மருந்தை வாங்கப் பல மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. சிறுவர்களுக்காக ஜைகோவ் டி என்னும் தடுப்பூசியை ஜைடஸ் காடிலா என்னும் மருந்து நிறுவனம் கண்டறிந்துள்ளது. இது 3 டோஸ்களாகும் மருந்து நிறுவனம் இந்த 3 டோஸ் மருந்துக்குமாக சேர்ந்து ரூ.1900 என விலை வைத்துள்ளது. இது ஊசியின்றி செலுத்தக் கூடியதாகும்.
மற்ற தடுப்பு மருந்துகளை விட இதன் விலை அதிகமாக உள்ளதால் மத்திய அரசு இந்த விலையைக் குறைக்க நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்த தகவலை மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த மருந்து பயன்பாட்டுக்கு வர இன்னும் ஒரு வாரம் ஆகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.