டில்லி
தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் வீட்டுக்கு வீடு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை வலியுறுத்தி உள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று 8442 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 2,65,928 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைப்போல் மரணம் அடைந்தோர் எண்ணிக்கையும் 7473 ஆகி உள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா, தமிழகம், டில்லி ஆகிய மாநிலங்கள் உள்ளன.
நேற்று இது குறித்து மத்திய சுகாதாரத்துறைச் செயலர் பிரீத்தி சுதன் காணொளி மூலம் ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த கூட்டத்தில் அந்த துறையின் மூத்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், அரசு மருத்துவமனை தலைமை அதிகாரிகள் மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தற்போது கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது கொரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், குஜராத், அரியானா, ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய 10 மாநிலங்களில் பரிசோதனை குறித்து ஆய்வு நடந்தது.
இந்த ஆய்வின் முடிவில் இந்த 10 மாநிலங்களிலும் உள்ள 45 மாநகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன. இந்த 45 மாநகராட்சிகளில் வீட்டுக்கு வீடு கொரோனா பரிசோதனை சரியான முறையில் நடத்த வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை வலியுறுத்தி உள்ளது.