டில்லி
ஸ்ரீராமஜென்ம பூமி ஆலயத்துக்கு மத்திய அரசு 80 ஜி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு அளித்துள்ளது.
அயோத்தியில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்க ராமர் கோவில் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கொரோனா பாதிப்பு தீவிரத்துக்கும் இடையில் சில வாரங்களுக்கு முன்பு ராமர் கோவில் கட்டுமான தொடக்க விழா நடந்தது.
இந்நிலையில் இன்று மத்திய நிதி அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், “வருமான வரி விதிகள் 1961 பிரிவு 80 ஜி யின் கீழ் மத்திய அரசு ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திராவுக்கு வருமான வரி விலக்கு அளித்துள்ளது” என குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த கோவில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் பொதுமக்களின் பிரார்த்தனை தலம் என்பதாலும் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த வருமான வரி விலக்கு வரும் 2020-21 ஆம் வருடம் அதாவது வருமான வரி கணக்கு வருடம் 2021-22 ஆண்டுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.