டில்லி

மத்திய அரசு வழங்கும் தலித் மாணவர் உதவித் தொகை பாக்கி ரூ.8600 கோடி இருக்கும் போது நிதிநிலை அறிக்கையில்ரூ.3000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தலித் மாணவர் உதவித் தொகைக்காக ரூ.3000 கோடி ஒதுக்கீடு உட்பட மொத்தம் ரூ. 7750 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   இது குறித்து மத்திய சமுக நீதித் துறை அமைச்சகம் பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளது.   இந்த பாராளுமன்ற நிலைக்குழுவில் பாஜக பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பைஸ் தலைமையில் இரு அவையில் உள்ள உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனர்.

அந்த கடிதத்தில், “மத்திய அரசு சமூகநீதித் துறை அமைச்சகம் மூலமாக தலித் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையின் மூலம் பல மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.   அவ்வகையில் கடந்த வருடம் தர வேண்டிய உதவித் தொகை பாக்கி ரூ. 8600 கோடி உட்பட மொத்தம் ரூ. 11027.5 கோடி இந்த வருடம் தேவைப்படுகிறது.   ஆனால் நிதி நிலை அறிக்கையில் உதவித் தொகை பாக்கிக்கான ஒதுக்கீடு ரூ. 3000  கோடி உட்பட ரூ.7750 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   அதனால் அமைச்சகம் எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்ற இயலாத நிலையில் உள்ளது”  என தெரிவிக்கப்பட்டுள்ளது.