டில்லி
மத்திய மனித வளத்துறை அமைச்சகம் அனைத்துப் பள்ளிகளிலும் காய்கறித் தோட்டங்கள் அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
நாட்டில் வளரும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சரியான சத்துள்ள காய்கறிகள் கிடைக்காதததும் மாணவர்களுக்கு போதுமான உடலுழைப்பு இல்லாமையும் என கூறப்படுகிறது. அத்துடன் சுற்றுச்சூழல் குறித்தும் மாணவர்களுக்கு அறிவுறுத்தும் நிலையும் உள்ளது.
இதையொட்டி மத்திய மனித வளத்துறை அமைச்சகம் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலர்களுக்கும் கல்வித்துறை அமைச்சகத்துக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி கிராம மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காய்கறித் தோட்டங்கள் அமைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கான வழிமுறைகள், விதைகள், நாற்றுக்கள், இயற்கை உரங்கள், பயிற்சி மற்றும் தொழில் நுட்ப ஆலோசனைகளை தோட்டக்கலைத்துறை, மாநில விவசாயப் பல்கலைக்கழகங்கள், வனத்துறை போன்றவைகள் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தோட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு தேவையான காய்கறிகளை அவர்களே பயிரிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.