புதுடெல்லி: ஜிஎஸ்டி வரிவிதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில் ரூ.35298 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பு நிதியில் நேரும் தாமதம் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசின் சார்பில் இந்த பதில் தெரிவிக்கப்பட்டது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டது முதல் 2 மாதங்களுக்கு ஒருமுறை மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்புத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இத்தொகை வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.
எனவே, இப்பிரச்சினையை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எழுப்ப பல மாநிலங்கள் திட்டமிட்டிருந்தன. இந்நிலையில் நாடாளுமன்றத்திலும் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது, மத்திய நேரடி வரி மற்றும் சுங்கத்துறை வாரியம் ரூ.35298 கோடியை மாநிலங்களுக்கு வழங்க உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.