டில்லி
இந்திய மருந்து மற்றும் தர நிர்ணய ஆணையம் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை 12 முதல் 18 வயது சிறாருக்குப் போட்டு சோதனை செய்ய அனுமதி அளித்துள்ளது.
தற்போது இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா இரண்டாம் அலை தாக்கம் கட்டுக்கடங்காமல் செல்கிறது. இந்நிலையில் கொரோனா 3 ஆம் அலை ஏற்படலாம் எனவும் அதைத் தடுக்க முடியாது எனவும் நிபுணர்கள் கூறியுள்ளனர். அப்போது சிறார்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
எனவே இப்போதே சிறார்களுக்கும் அவசியம் தடுப்பூசி போடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பாரத் பயோடெக் நிறுவனம் தனது கோவாக்சின் தடுப்பூசியை இதற்கான முதல் கட்ட பரிசோதனையில் ஈடுபடுத்தியது. அந்த முடிவுகளை மத்திய மருந்து மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் அளித்த நிறுவனம் 2 மற்றும் 3 ஆம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி கோரியது.
மருத்துவ நிபுணர் குழு இந்த கோரிக்கையைப் பரிசீலித்தது. அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஆணையம் 2 மற்றும் 3ஆம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக 2 ஆம் கட்ட பரிசோதனை முடிவுகளை ஆணையத்திடம் அளித்த பிறகே 3ஆம் கட்ட பரிசோதனையைத் தொடங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
கோவாக்சின் தடுப்பூசியை 2 – 18 வயதுக்கு உட்பட்டோருக்கு அளிக்கும் 2 மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் டில்லி, பாட்னா நகரில் உள்ளஎ எய்ம்ஸ் மருத்துவமனைகள், நாக்பூர் மேட்ரினா மருத்துவ அறிவியல் மருத்துவமனை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன். இந்த சோதனை சுமார் 525க்கும் அதிகமானோரிடம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.