விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

உணவு மற்றும் குடிநீர் இன்றி தவிக்கும் மக்களுக்கு படகுகள் மூலம் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்த முதலமைச்சர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

மழை பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப உள்ளதாகவும் பயிர் உள்ளிட்ட மற்ற பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வெள்ள பாதிப்பு குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கப்பட வில்லை என்று சுட்டிக்காட்டிய முதலமைச்சரிடம் “அப்படி இருக்கையில் வெள்ள நிவாரணம் குறித்த தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு எப்படி ஏற்கும் என்று கருதுகிறீர்கள்” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர், “மழை பாதிப்பு உள்ளிட்ட விவரங்களுடன் உரிய நிவாரணம் குறித்தும் அறிக்கை அனுப்பியுள்ளோம்.

தமிழகத்தின் கோரிக்கையை ஏற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் தான் அனுப்பியுள்ளோம், வழக்கம் போல் அவர்கள் ஏற்காவிட்டாலும் தமிழக மக்களுக்கு வேண்டியதை மாநில அரசு செய்யும்” என்று கூறினார்.