மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் அழுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், வீட்டு சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மத்திய அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை (Essential Commodities Act) பயன்படுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில், நாட்டில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களுக்கு எல்.பி.ஜி. உற்பத்தியை அதிகரிக்கவும், அதற்குத் தேவையான முக்கிய ஹைட்ரோகார்பன் மூலப்பொருட்களை எல்.பி.ஜி. உற்பத்திக்காக மாற்றி பயன்படுத்தவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், சில முக்கிய துறைகளுக்கு வழங்கப்படும் இயற்கை எரிவாயு (Natural Gas) விநியோகம் முன்னுரிமை அடிப்படையில் தொடர வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. அவை கடந்த ஆறு மாதங்களின் சராசரி பயன்பாட்டின் 100 சதவீதம் வரை, செயல்பாட்டு சாத்தியமுள்ள அளவில் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னுரிமை பெறும் துறைகள்:
- வீடுகளுக்கான குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG)
- போக்குவரத்திற்கான சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு (CNG)
- எல்.பி.ஜி. உற்பத்தி
- எரிவாயு குழாய்களின் இயக்கத்திற்கு தேவையான எரிபொருள்
அதே நேரத்தில், உர தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் இயற்கை எரிவாயு, கடந்த ஆறு மாதங்களின் சராசரி பயன்பாட்டின் 70 சதவீதம் வரை வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேயிலை தொழில்கள், உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தேசிய எரிவாயு குழாய் வலையமைப்பில் இணைக்கப்பட்டுள்ள பிற தொழிற்சாலைகளுக்கு, கடந்த ஆறு மாதங்களின் சராசரி பயன்பாட்டின் 80 சதவீதம் வரை எரிவாயு வழங்க வேண்டும் என்று எரிவாயு சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், நகர எரிவாயு விநியோக நிறுவனங்கள் (City Gas Distribution) தங்களது வலையமைப்பின் மூலம் எரிவாயு பெறும் தொழில்துறை மற்றும் வணிக நுகர்வோருக்கு கடந்த ஆறு மாத சராசரி பயன்பாட்டின் 80 சதவீதம் வரை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எல்.என்.ஜி. (LNG) விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்க, எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எரிவாயு அளவை கடந்த ஆறு மாத சராசரி பயன்பாட்டின் 65 சதவீதம் வரை குறைக்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் வீட்டு சமையல் எரிவாயு விநியோகம் தடையின்றி நடைபெறுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
[youtube-feed feed=1]