டெல்லி: ஜூன் 1ம் தேதி வரை 1.63 கோடி உணவு பொட்டலங்கள், 2.10 கோடி தண்ணீர் பாட்டில்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக விநியோகிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து வசதியின்றி அவர்கள் கால்நடையாகவே சொந்த ஊர்களுக்கு பயணித்தனர்.
இந்த முயற்சிகளின் போது புலம்பெயர் தொழிலாளர்கள் விபத்து உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்பது, உணவு, உறைவிடம் ஆகியவை இல்லாமல் தவிப்பது போன்ற செய்திகள் ஊடகங்களில் வெளியாகின.
அதன் அடிப்படையில் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு பிரமாணம் தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் செல்லும் புலம் தொழிலாளர்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. நடந்து செல்லும் தொழிலாளர்களை அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு செல்ல போக்குவரத்து வசதி செய்து தரப்பட்டு வருகிறது.
அவர்களுக்கு தேவையான உணவு , குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. ஜூன் 1ம் தேதி வரை 1.63 கோடி உணவு பொட்டலங்கள், 2.10 கோடி தண்ணீர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டு உள்ளன என்று அதில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.