டில்லி:
மத்திய அரசுக்கு எதிராக சி.பி.ஐ. இயக்குநர் அலோக்வர்மா தொடர்ந்த வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிபிஐ இயக்குநர்களிடையே நடைபெற்று வந்த பனிப்போர் காரணமாக, சிபிஐ இயக்குனர் பணியியில் இருந்து கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதற்கு எதிராக அலோக்வர்மா மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
சி.பி.ஐ. இயக்குனர் அலோக் குமார் வர்மா, சிறப்பு இயக்குனர், ராகேஷ் அஸ்தானா இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, இருவரும், ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர்த. இந்த மோதல் உச்சக் கட்டத்தை அடைந்ததை அடுத்து, அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரை நீக்க மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் அவர்கள் இருவரையும் கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியது.
இதைத் தொடர்ந்து இணை இயக்குநர் எம். நாகேஸ்வர் ராவ் இடைக்கால இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இதனால் சிபிஐ இயக்குநருக்கான பணிகளில் இருந்து தன்னை விடுவித்து, கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக அலோக் குமார் வர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கின் விசாரணையின்போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இரண்டு அதிகாரி களுக்கு இடையிலான மோதல், ஒரே நாளில் ஏற்படவில்லை. எனவே, ஒரே நாள் இரவில் அலோக் வர்மாவின் அதிகாரத்தை, தேர்வுக் குழுவிடம் ஆலோசனை நடத்தாமல் பறித்தது ஏன்? அரசு நேர்மையுடன் செயல்பட வேண்டும். அலோக் வர்மா மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், தேர்வுக்குழுவிடம் ஆலோசனை நடத்துவதில் இருந்த சிக்கல் என்ன? என கேள்வி எழுப்பினார்.
மேலும், சிறந்த தீர்வு ஏற்பட, மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் நேர்மையாக இருப்பது முக்கியம். அலோக் வர்மா, இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற உள்ள நிலையில், அதுவரை ஏன் காத்திருக்கவில்லை. இது குறித்து ஏன் தேர்வுக் குழுவிடம் ஆலோசனை நடத்தவில்லை எனும் கேள்விகளையும் எழுப்பினார்.
அதற்கு, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பதில் அளிக்கையில், இந்த நிலைமை அசாதாரணமானது என்றும், சிபிஐ மூத்த இயக்குநர்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. எனவே இதில் தலையிட்டு சில முடிவுகளை எடுக்கவில்லை எனில் சிவிசி மீதுதான் ‘கடமை தவறியக் குற்றச்சாட்டு’ எழும் என்றார்.
அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் கூறுகையில், வர்மா சி.பி.ஐ இயக்குநர் பதவியிலிருந்து இடமாற்றம் செய்யப்படவில்லை. ஆனால், இடமாற்றம் செய்யப்பட்டதாக, வேண்டுமென்றே வாதாடுகிறார். அவரது பொறுப்புகள் மாற்றப்பட்டதுடன், செயல்படவும் தான் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
வர்மா மீதான நடவடிக்கை “பொதுமக்கள் நலனுக்காக நிறுவன ரீதியான ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக” எடுக்கப்பட்டது என அரசு தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்குத் தெரிவிகப்பட்டது.
அலோக் வர்மா சார்பில் ஆஜரான பாலி நாரிமன் வாதாடுகையில், எந்த சூழ்நிலையாக இருந்திருந்தாலும் அரசு தேர்வுக்குழுவிடம் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். இந்த வழக்கில், இடமாற்றம் என்பது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது மட்டும் அர்த்தம் இல்லை என்றார். அஇரு தரப்பு வாதங்களை கேட்ட பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது.