சென்னை

த்திய அரசு இந்தி பேசாத மாநிலமான தமிழகத்துடன் இந்தியில் தொடர்பு கொள்ளக் கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு இந்தி மொழியை ஆட்சி மொழியாக மாற்ற பல நடவடிக்கைகள் எடுத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.  அவற்றில் ஒன்றாக மத்திய அரசு இந்தி பேசாத மாநிலங்களுடன் இந்தியில் தொடர்பு கொள்வதாகப் புகார் எழுந்துள்ளது.  மதுரையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அவர் மத்திய அரசிடம் ஆங்கிலத்தில் விளக்கம் கேட்டதற்கு தனக்கு இந்தியில் பதில் அளித்துள்ளதாகவும் தமக்கு இந்தி தெரியாததால் அந்த விவரம் புரியவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.  இந்த மனு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் மற்றும் துரைசாமி ஆகியோரின் அமர்வின் கீழ் விசாரிக்கப்பட்டது.

இந்த மனு விசாரணையில் நீதிபதிகள், “இந்தி மொழியை மத்திய மொழி அலுவல் மொழியாக அறிவித்தாலும் தமிழகத்துடன் அந்த மொழியில் தொடர்பு கொள்ள முடியாது.   இந்தி பேசாத மாநிலங்களின் வசதிக்காக அந்த மாநிலங்களுடன் ஆங்கிலத்தில் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற விதி முறைகள் தெரிவிக்கின்றன.

இந்த விதியின்படி இந்தி பேசாத மாநிலங்களில் ஒன்றான தமிழகத்துடன் மத்திய அரசு இந்தி மொழியில் தொடர்பு கொள்ளக் கூடாது என நீதிமன்றம் தெரிவிக்கிறது.  மேலும் அரசியலமைப்பு சட்டம் 350 இன் படி ஒரு மாநில அல்லது மத்திய அரசிடம் ஒருவர் எந்த மொழியில் கேள்வி எழுப்புகிறாரோ அதே மொழியில் பதில் அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.