சென்னை: தமிழகத்தில் சிமெண்ட் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விலையேற்றம் குறித்து, சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த ஓராண்டுக்கு மேலாகச கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டமானப் பொருட்களான சிமெண்ட், கம்பி, ஜல்லி, செங்கல் போன்றவை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இது சாமானிய மக்களுக்கு பெரும் சுமையை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த கிளாஸ்-1 ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் ஆர். செல்வராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிமெண்ட் விலையை கட்டுப்படுத்தக் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், “கட்டுமான தொழிலுக்கு மிக முக்கியமான பொருளான சிமெண்ட் விலையேற்றம் சமீப காலமாக உயர்ந்துள்ளது. இதனால், கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தொழிலை நம்பி வாழும் லட்சக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொப ரோனா ஊரடங்கு காலத்தில், கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், சிமெண்ட் விலையேற்றம், அதைச் சார்ந்த தொழில்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
சிமெண்ட் உற்பத்தியாளர்கள் கூட்டுச் சேர்ந்து செயற்கையாகத் தட்டுப்பாட்டை உண்டாக்கி, விலையை உயர்த்திவருகின்றனர். இதில், சிமெண்ட் உற்பத்தியாளர் களின் கூட்டுச்சதி உள்ளது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே, செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கி, சிமெண்ட் விலையை உயர்த்திவரும் உற்பத்தியாளர்களின் கூட்டுச்செயல் பற்றி விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும். சிமெண்ட் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்புராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி, வி. இளங்கோவன் ஆகியோர் வாதிட்டனர். விசாரணையைத் தொடர்ந்து சிமெண்ட் விலை உயர்வு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி,ஜூன் 3ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சீனிவாசனிடம் நோட்டீஸ் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தினர்.