கடந்த சில மணி நேரங்களாக சமூகவலைதளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது. அதாவது, “13 எண்கள் உள்ள அழைப்பு ஒன்று செல்போன்களுக்கு வருகின்றது. இதை அட்டண்ட் செய்தால் சில விநாடிகளில் செல்போன் வெடித்துவிடுகிறது. இப்படி நடந்து தூத்துக்குடியில் 27 பேர் இறந்துவிட்டார்கள். சென்னையிலும் இதே போல சிலர் மரணமடைந்துவிட்டார்கள்” என்றெல்லாம் பேசி சிலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
ஆனால், இது போல நடக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள் செல்போன் தொழில் நுட்ப வல்லுனர்கள்.
ஒரு செல் போனுக்கு அழைப்பு வருவதுபோலவும் அதை ஏற்றவுடன் செல்போன் வெடிப்பது போலவும் ஒரு வீடியோ காட்சியும் பரவி வருகிறது. இதையும் பார்க்கும்போதே கிராபிக்ஸ் என்பது தெரிகிறது.
தவிர அதில் வரும் எண் 777888999 என்று வருகிறது. அப்படி ஒரு எண்ணே கிடையாது.
இப்படி வதந்திகளைப் பரப்புவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
இது குறித்து சென்னை காவல்துறைக்கும் தகவல் அனுப்பியுள்ளோம்.