தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளரும் பிரபல இயக்குனருமான கேவி ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு கொரோனா நோய் தொற்றும் இருந்துள்ளது.

கே.வி.ஆனந்த் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் பாரதிராஜா : இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர், இயக்குநர், தமிழனுக்கு பெருமைச் சேர்த்த பேரன்பு கொண்ட கே.வி. ஆனந்த். உன் மறைவு நம்பமுடியவில்லை, அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கும், திரையுலகத்துக்கும், ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார் .

தனுஷ் : மென்மையான, கனிவான, நேர்மையான மனிதர் மறைந்து விட்டார். மிகவும் உற்சாகத்தோடு, உயிர்ப்போடு இருந்த இனிமையான மனிதர். கேவி ஆனந்த் சார், இவ்வளவு சீக்கிரமாக விட்டுச் சென்றுவிட்டீர்களே, இவ்வளவு சீக்கிரமாக. அவரது குடும்பத்துக்கு என் இரங்கல்கள். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் சார்

ராதிகா சரத்குமார் : தீவிர மாரடைப்பின் காரணமாக இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் கேவி ஆனந்த் மறைந்த செய்தியைக் கேட்டு வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு அதிர்ச்சியடைந்திருக்கிறேன். மிகவும் இளமையான, திறமையான மனிதர். துறைக்குப் பேரிழப்பு,

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் : இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு மிகுந்த வருத்தத்துக்கு ஆளாகியிருக்கிறேன். உங்கள் இழப்பை உணர்வோம் சார். ஆன்மா சாந்தியடையட்டும்.

ஜெயம் ரவி : பெரிய அதிர்ச்சி, ஆழ்ந்த வருத்தம். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் கேவி ஆனந்த் சார். அவரது குடும்பத்தினருக்கு மனமார்ந்த இரங்கல்கள், ஆறுதல்கள்,

தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி : பெரிய அதிர்ச்சி, முழுமையாக உடைந்துபோயிருக்கிறேன். நமது திரைத்துறையில் இருக்கும் மிக இனிமையான இயக்குநர்களில் ஒருவர். அற்புதமான மனிதர். நாங்கள் அனைவரும் உங்கள் இழப்பை உணர்வோம் சார். உங்கள் படங்களுக்கும், விட்டுச் சென்ற நினைவுகளுக்கும் நன்றி. உங்களுடன் பணியாற்றியது எங்களுக்குக் கிடைத்த பெருமை.

பாடகர் ஸ்ரீனிவாஸ் : 54 வயதில் கேவி ஆனந்த் மறைந்துவிட்டார். நம்பமுடியவில்லை. அவருக்கு நெருக்கமானவர்களுக்கு என் அனுதாபங்கள்.

பிரசன்னா : இந்த கொடுமையான செய்தியைக் கேட்டு கண் விழித்தது பெரிய அதிர்ச்சியை, சோகத்தைத் தந்திருக்கிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் : இந்த பேரதிர்ச்சியான செய்தியைக் கேள்விப்படது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். என் நண்பன் கேவி ஆனந்தின் ஆன்மா சாந்தியடையட்டும்.

நடிகர் கவுதம் கார்த்திக் : ஒரு அற்புதமான படைப்பாளியை நாம் இழந்துவிட்டோம். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். அவர் குடும்பத்தினருக்கு என் அனுதாபங்கள்

வரலட்சுமி சரத்குமார் : கோவிட் நம்மிடமிருந்து சீக்கிரமாகப் பல நல்ல ஆன்மாக்களைக் கொண்டு செல்கிறது. கேவி ஆனந்த் சார் பற்றிக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். மிகவும் அச்சமாக இருக்கிறது. தயவுசெய்து எளிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள். முகக்கவசம் அணியுங்கள். கிருமி நாசினி பயன்படுத்துங்கள். அரசு சொல்லும் வரை காத்திருக்காதீர்கள்.

பிசி ஸ்ரீராம் : உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் கேவி ஆனந்த். சீக்கிரமாக எங்களை விட்டுச் சென்றுவிட்டீர்கள். எப்போதும் என்னுள் ஒரு பகுதியாக நீங்கள் இருப்பீர்கள் நண்பரே. சென்று வாருங்கள்.

நடிகர் மோகன்லால் : அவர் நம் பார்வையிலிருந்து மறைந்துவிட்டார். ஆனால் எப்போதும் நம் இதயத்தில் இருப்பார். கே.வி.ஆனந்த் சார் நீங்கள் என்றென்றும் நினைவுகூரப்படுவீர்கள். அவரது ஆன்மாவுக்கு எனது பிரார்த்தனைகள்.

நடிகர் அல்லு அர்ஜுன் : இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைந்துவிட்டார் என்ற துக்க செய்தியுடன் கண் விழிக்க நேரந்தது. அற்புதமான ஒளிப்பதிவாளர், புத்திசாலித்தனமான இயக்குநர், அருமையான மனிதர். சார், நீங்கள் என்றென்றும் நினைவில் இருப்பீர்கள். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் சார்.

மேலும், நடிகைகள் ரித்விகா, ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்வதி நாயர், அதுல்யா ரவி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி, இயக்குநர்கள் பாலாஜி மோகன், ராஜேஷ், செல்வராகவன், திரு, பிஜோய் நம்பியார், இசையமைப்பாளர் இமான், நடிகர்கள் அசோக் செல்வன், அருண்விஜய், துல்கர் சல்மான், நிவின் பாலி, அசோக் செல்வன், விக்ரம் பிரபு, சிபி சத்யராஜ், உள்ளிட்டோரும் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.