டில்லி
பள்ளிகளில் தங்கள் குழந்தைகள் கல்வி கற்பதை பெற்றோர்கள் இருப்பிடத்தில் இருந்தே தங்கள் மொபைலில் பார்க்கும் வசதியை டில்லி அரசு அமைக்க உள்ளது.
டில்லியில் குழந்தைகளின் மீதான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீப காலமாக அது போன்ற வன்முறைகள் பள்ளி வளாகத்தின் உள்ளேயே நடந்து வருகின்றன. ஷதாராவில் ஒரு பள்ளியில் ஐந்து வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். குர்கானில் ஒரு பள்ளியில் ஏழு வயது சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டார்.
இதனால் பள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் மிகவும் கவலை அடைந்தனர். அதை ஒட்டி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சிசிடிவி கண்காணிப்புக் காமிரா பொருத்த டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இன்னமும் மூன்று மாதங்களுக்குள் இந்தப் பணி நிறைவடைய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதே போல அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
இந்தப் பணி முடிவடைந்ததும் அனைத்து பெற்றோர்களும் தங்கள் மொபைல் மூலம் குழந்தைகள் பள்ளியில் கல்வி கற்பதைக் கண்காணீக்க முடியும் என அரசு தரப்பில் சொல்லப் பட்டுள்ளது. அத்துடன் இந்த காமிராக்கள் இயங்காவிடில் அது குறித்து தானியங்கி முறையில் புகார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனே செல்லும் வகையில் அமைக்கப் பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.