ஹத்ராஸ்:
த்தர பிரதேசத்தில், கூட்டு பாலியல் பலாத்காரத்தால் பலியான, இளம் பெண் குடும்பத்தினருக்கு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

உ.பி., மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த, 19 வயது தலித் இளம் பெண், கூட்டு பாலியல் பலாத்காரத்தால் படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தை தொடர்ந்து, பலியான இளம்பெண் வீட்டிற்கு, பெண்கள் உட்பட, 60 போலீசார், 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து, போலீஸ் டி.ஐ.ஜி., சலப் மாத்துார் கூறியதாவது: இறந்த பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த, ஒவ்வொரு நபருக்கும் இரு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த பணிகளை பார்வையிட, லக்னோவில் இருந்து உயர் அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டு உள்ளார். தீயணைப்பு படையினரும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களின் வீட்டில், எட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. தேவைப்பட்டால், அங்கு ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். அங்கு வரும் பார்வையாளர் களின் பெயர்கள் பதிவு செய்யப்படுவதுடன், வீட்டின் பிரதான வாயிலில் ‘மெட்டல் டிடெக்டர்’ கருவி பொருத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.