டெல்லி: சிபிஎஸ்இ கேள்வித்தாள் சர்ச்சை தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றது. அப்போது பேசிய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நாடு முழுவதும் தற்போது சிபிஎஸ்இ மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு நடைபெற்று வருகின்றன. கடந்த 11-ம் தேதி 10ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வுக்கான வினாத்தாளில், பெண்கள் தங்கள் கணவருக்கு அடங்கி இருக்க வேண்டும் என்ற பொருளில் கேள்வி இடம்பெற்றது. மேலும், மற்றொரு கேள்வியில், கணவனின் பேச்சை கேட்டால் தான் குழந்தைகளின் கீழ்படிதலை தாயால் பெற முடியும் என்றும், குழந்தைகள் மீதான பெற்றோரின் அதிகாரத்தை பெண் விடுதலை அழித்துவிடுகிறது என்பது போன்ற கருத்துகள் இடம்பெற்றிருந்தது.
இது சர்ச்சையானது. பெண் அடிமைத்தனத்தை ஊக்குவிப்பதாக கேள்வி இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, சிபிஎஸ்இ தவறுக்கு மன்னிப்பு கோரியது.
இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இதுகுறித்து மக்களவையில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரும், எம்.பி.யுமான சோனியா காந்தி, CBSC தேர்வில் பெண்கள் மீதான வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கேள்வி இடம் பெற்றதற்கு “மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தியதுடன், அதை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும், கேள்வி எப்படி இடம் பெற்றது என விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.