டில்லி:
12வது வகுப்பு பொருளியல், 10வது கணிதம் பாடங்களுக்கு மறு தேர்வு நடைபெறுவதாக சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்து உள்ளது.
சிபிஎஸ்சி 10வது மற்றும் 12வது வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் சமீபத்தில் நடைபெற்று முடிந்தன.
இந்நிலையில், ஒருசில பாடங்களுக்கான கேள்வி தாள்கள் இணைய தளங்களில் வெளியானதாக குற்றச்சாட்டு எழும்பியது. தலைநகர் டில்லியில் வாட்ஸ்அப் மூலம் கேள்வித்தாள் பரவியதாகவும் கூறப்பட்டது.
இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோல 10வது வகுப்பு கணித பாட கேள்வித்தாளும் வட மாநிலங்களில் வெளியானதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக புகார் வந்துள்ளதாகவும், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியிருந்தார்.
ஆனால், சிபிஎஸ்இ கல்வி வாரியம் அதை மறுத்து வந்தது. தேர்வினை சீர்குலைக்க சில சமூக விரோதிகள் முயற்சி செய்கின்றனர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பிளஸ்2 எக்னாமிக்ஸ் மற்றும், 10வது வகுப்பு கணிதம் தேர்வுகள் மீண்டும் நடைபெறும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்து உள்ளது.
தேர்வு நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.