2023ம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய பாடத்திட்ட பரிந்துரையின்படி சிபிஎஸ்இ பாடப்பிரிவில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் Open Book Examinations (OBE) முறையை செயல்படுத்த சிபிஎஸ்இ கல்வி வாரியம் (CBSE) உத்தேசித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிபிஎஸ்இ பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக தேர்வு முறைகள் ஆண்டுக்கு ஆண்டு மாறிவரும் நிலையில் புதிதாக OBE முறையை நடைமுறைப்படுத்த உள்ளது.

இந்த ஆண்டு நவம்பர் – டிசம்பர் மாதங்களில் மாணவர்களுக்கான திறந்த புத்தகத் தேர்வுக்கான சோதனை ஓட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு முன்னதாக ஆசிரியர்களிடையே OBE நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வரும் ஜூன் மாதம் ஆசிரியர்களுக்கு OBE தேர்வுகள் நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த சோதனை தேர்வுகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பி.எம். ஸ்ரீ மாதிரி பள்ளிகள் உள்ளிட்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்களின் சிந்தனைத் திறன், பயன்பாடு, பகுப்பாய்வு, விமர்சன மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனை மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படும் இந்த திறந்த புத்தகத் தேர்வு வழக்கமான தேர்வு முறையை விட மிகவும் கடினமானது என்று கூறப்படுகிறது.

OBE தேர்வு நடைமுறைகள் குறித்து டெல்லி பல்கலைக்கழத்திடம் இருந்து ஆலோசனை பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேவேளையில் கொரோனா காலகட்டத்தில் 2020 ஆகஸ்ட் முதல் 2022 மார்ச் வரை இதேபோன்ற OBE தேர்வுகளை டெல்லி பல்கலைக்கழகம் நடத்திய நிலையில் பின்னர் சாதாரண தேர்வு முறைக்கு மாறியது குறிப்பிடத்தக்கது.