இந்தியாவில் அரசுப் பாடப் புத்தகங்களில் அவ்வப்போது மோசமான வாக்கியங்கள் இடம் பெறுவதுண்டு. அவை சில நேரங்களில் கீழ்த்தரமானதாகவும் மாறுவதுண்டு. அதனை நம்மால், உதாசீனப்படுத்திவிட்டு கடந்துவிட முடியாது.
ஏற்கனவே அதற்கு எடுத்துக் காட்டாய், அழகு x அசிங்கம் ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாய், “வெள்ளைத் தோல் கொண்ட பெண்ணையும், கருப்பான பெண்ணையும் சித்தரித்து இருந்தது .
தற்போது அதேப் போல், பெண்ணின் இடை எப்படி இருக்க வேண்டும் எனக் கருத்துத் திணிப்பு வாசகம் மத்திய பாடத்திட்ட உடற்கல்வி புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அனுஜ் குரானா என்பவர் சி.பி.எஸ்.இ. யினால் அங்கீகரிக்கப் பட்ட சுகாதாரம் மற்றும் உடற்கல்வி பாடப் புத்தகத்தில் உள்ளதைப் படம்பிடித்து தன்னுடைய ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
டாக்டர். வி.கே.ஷர்மா என்பரால் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தின் 161ம் பக்கத்தில் எழுதப் பட்டுள்ள இந்தக் கருத்துக்களால் சர்ச்சை எழுந்துள்ளது.
பெண்களின் மார்பளவு- இடுப்பு- பிட்டம் அளவினைக் குறிக்கும் 36-24-26 எனும் அளவுதான் சிறந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக அழகிப் போட்டியில் வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கும்போது இந்த அளவு உள்ளவரைத் தான் தேர்ந்தெடுப்பார்கள் என்று உதாரணம் கொடுக்கப் பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்தில் பெண்களுக்கு ஏற்ற உடற்கட்டு என்ன என்பதை கூறுவதோடு நிற்கவில்லை. ஆண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் விளக்குகின்றது.
தோற்றத்தில் உள்ள வித்தியாசங்கள் எனும் பகுதியில் ‘V’ உடல் வடிவம் சிறந்ததாகக் கருதப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இயற்கையில் பெண்களின் உடல்வாகு ஆண்களைவிட வித்தியாசமாய் இருப்பதால், பெண்களால், சிறந்த வீராங்களைகளாக ஆகமுடியாது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
இருப்பினும், சிபிஎஸ்இ பள்ளிகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பாடப்புத்தகங்களைக் கொண்டுவரும் தேசிய கல்வி கழகம் மற்றும் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி (NCERT) நிறுவனத்தால் இந்தப் புத்தகம் வெளியிடப்படவில்லை. இந்தப் பாடப் புத்தகம், “புதிய சரஸ்வதி இல்லம்” பிரசுரத்தால் வெளியிட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.
காற்று மாசுபாட்டை தவிர்க்க இறந்தவர்களைப் புதைப்பது சிறந்ததா? எரிப்பது சிறந்ததா? எனும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பாடப்புத்தகத்திலும், கேள்வியாய் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்புத் தேர்வு வினாத்தாள்களிலும் கேட்கப்பட்ட்து சர்ச்சையானது. (முஸ்லிம்கள் புதைப்பதையும் இந்துக்கள் எரிப்பதையும்ம் வழக்கமாகக் கொண்டுள்ளனர். சமீபத்தில் பிரதமர் மோடி கூட, உத்திரப்பிரதேசத் தேர்தலில் போது மதவெறியைத் தூண்டும் வகையில் பேசியது சர்ச்சையானது தனிக்கதை )
மற்றொரு சர்ச்சையில், நான்காம் வகுப்பிற்கான “சுற்றுச்சூழல் ஆய்வுகள்” பாடநூலில் ஒரு பூனைக்குட்டியின் மரணத்திற்கு வழிவகுக்கும் ஒரு பரிசோதனை நடத்திடும்படி மாணவர்களுக்கு ஒரு பரிசோதனைக்கு பரிந்துரைக்கப் பட்டிருந்தது. அந்தச் சோதனையில்,
ஒருமரப்பெட்டியை இரண்டாகப் பிரித்து இரண்டு பூனைக்குட்டிகளை அதில் அடைத்து வைக்கவும். ஒரு பகுதியில் காற்று உள்ளே செல்ல ஓட்டையும், மற்றொன்றில் ஓட்டை இல்லாமலும் வைத்துச் சோதிக்க வேண்டும். சோதனை முடிவில், மாணவர்கள், ஓட்டை இல்லாமல் வைக்கப் பட்ட பூனை இறந்துவிடும் என்பதைத் தெரிந்துக் கொள்ளும் சோதனை இது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
சமூகவியல் எனும் பனிரெண்டாம் வகுப்பு புத்தகத்தில் திருமணம் என்பது இருவர் உடலுறவு கொள்வதற்கு சமூக அங்கீகாரம் என்றும், செக்ஸ் வாழ்க்கையை ஒழுங்குப் படுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.