டில்லி:

நீட் தேர்வு முடிவு வெளியிட மதுரை ஐகோர்ட்டு கிளை விதித்துள்ள தடையை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த ஆண்டு முழுவதும் நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ஒரே மாதிரியான நுழைவு தேர்வு நடைபெறும் என்று மத்தியஅரசு அறிவித்து, தேர்வை நடத்தியது.

ஆனால், தேர்வுக்கான வினாக்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்டிருப்பதாகவும், சில மாநில வினாத்தாள்கள் எளிதாக இருந்ததாகவும் புகார் எழுப்பப்பட்டது.

இதன் காரணமாக மதுரை ஐகோர்ட்டில் மாணவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, நீட் தேர்வு முடிவு வெளியிட சிபிஎஸ்இ கல்வி வாரியத்துக்கு தடை விதித்தும், மற்ற மாநில வினாத்தாள்களை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து சமர்ப்பிக்கும்படி மனுதாரருக்கும் உத்தரவிட்டது.

இதன் காரணமாக மருத்துவ மாணவர் சேர்க்கை தாமதமாகி உள்ளது.

இதையடுத்து நீட் தேர்வு முடிவை வெளியிட மதுரை ஐகோர்ட்டு கிளை விடுத்துள்ள தடையை எதிர்த்து சிபிஎஸ்இ மனுத்தாக்கல் செய்துள்ளது.

அதில், மதுரை ஐகோர்ட்டு கிளை  தடையால் 12 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுள்ளது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை திங்கட்கிழமை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.