டெல்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலை 4ந்தேதியும், 12ம் வகுப்பு தேர்வு ஜூலை 10–ந்தேதி வெளியாவதாக தகவல் வெளியாகி உள்ளது.

2021–22ம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி மே 24ம் தேதி வரை நடைபெற்றது. இதேபோல 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி ஜூன் 15ம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும்,  10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். அதில் 21 லட்சம் மாணவர்கள் 10ம் வகுப்பும், 14 லட்சம் பேர் 12ம் வகுப்பும் தேர்வெழுதினர். ஆனால், இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வில்லை. இது மாணாக்கர்கள், பெற்றோர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரிகள் தொடங்க உள்ள நிலையில், தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்து 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 4ம் தேதி மற்றும் 10–ந்தேதி வெளியாகும் என்று மத்திய கல்வி அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை cbse.gov.in மற்றும் cbresults.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளத்தின் பதிவு எண், ரோல் எண்ணை உள்ளீடு செய்து தெரிந்துகொள்ளலாம். இது தவிர, மாணவர்கள் தங்கள் முடிவுகளை Digilocker செயலி மற்றும் இணையதளத்தில் அதாவது digilocker.gov.in மூலமும் தெரிந்துகொள்ளலாம்.