டெல்லி: சிபிஎஸ்இ கல்வி முறையில் படித்து வரும், 10ம் வகுப்பு 12ஆம் வகுப்புக்கான 2வது பருவ தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை இரு பகுதிகளாக, அதாவது இரு பருவங்களாக பிரித்து தேர்வு நடத்தப்படும் என கடந்தஆண்டு சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்தது. ஒவ்வொரு பருவத் தேர்விலும் பாடத்திட்டத்தின் 50 சதவீதப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஏதேனும் ஒரு தேர்வை நடத்த முடியாத சூழலில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.அதன்படி, முதல் பருவத் தேர்வு நவம்பர் – டிசம்பர் மாதங்களிலும், 2-வது பருவத் தேர்வு மார்ச் – ஏப்ரல் மாதங்களிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வுகள் 90 நிமிடங்களுக்கு நடைபெறுகிறது.
இந்த புதிய அறிவிப்பின்படி நடப்பு கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே முதல்பருவத் தேர்வு 2021ம் ஆண்டு இறுதியில் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது 2வது பருவத்தேர்வுக்கான தேதிகளை அறிவித்து உள்ளது.
இரண்டாம் பருவத் தேர்வு ஏப்ரல் 26 முதல் நடைபெறும். 10ஆம் வகுப்புத் தேர்வு மே 24ஆம் தேதியும், 12ஆம் வகுப்புத் தேர்வு ஜூன் 15ஆம் தேதியும் நடைபெறும். தேர்வு நேரம் காலை 10:30 மணிக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.