டெல்லி: சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு, 12-ம் வகுப்புக்கான முதல் பருவத்தேர்வு தேதிகளை மத்திய கல்வி வாரியம் வெளியிட்டு உள்ளது.

கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதைத் தொடர்ந்து கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. சில பகுதிகளில் ஆன்லைன் வகுப்புகளும் தொடர்கின்றன. முன்னதாக,  சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 கட்டங்களாக பருவத்தேர்வு நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி முதல் பருவத்தேர்வு குறித்த அறிவிப்பை  சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது. அதன்படி,  சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத்தேர்வு, வரும் 17-ம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத்தேர்வு, வரும் 16-ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

ஒவ்வொரு தேர்வும் காலை 11.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை 90 நிமிடங்களுக்கு நடத்தப்படும் என்றும், இது அப்ஜக்டிவ் என்ற புறநிலை வகை தேர்வாக நடைபெறும் எனவும் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து 2-ம் பருவத்தேர்வு, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் என தெரிவித்து உள்ளது.