டெல்லி:

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.  சி.பி.எஸ்.இ. தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் வெளியிட்டார்.

நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள  சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்துவதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

பொதுத்தேர்வு பிப்ரவரி 15-ந்தேதி தொடங்கி மார்ச் 30-ந்தேதி வரை நடக்கிறது. இதில், 137 வகையான பாடப்பிரிவுகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ. தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி  வெளியிட்டுள்ளார்.

அதில், 110 வகையான பாடப்பிரிவுகளுக்கு தேர்வுகள் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையும், 19 பாடப்பிரிவுகளுக்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையும், 8 பாடப்பிரிவுகளுக்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் தேர்வுகள் நடக்கிறது.

காலை 10 மணிக்கு மாணவர்களுக்கு விடைத்தாள்கள் வழங்கப்படுகிறது. விடைத்தாளின் முதல் பக்கத்தில் பெயர், பதிவு எண் உள்ளிட்ட தகவல்களை நிரப்புவதற்காக 10.15 மணி வரை 15 நிமிடங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. 10.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்படுகிறது. வினாத்தாளை வாசிப்பதற்கும் 15 நிமிடங்கள் ஒதுக்கப்படுகிறது.

பின்னர் 10.30 மணிக்கு தேர்வு தொடங்குகிறது.

கூடுதல் தகவல்களுக்கு www.cbse.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டு உள்ளது.