5 கோடி ரூபாய் லஞ்சம்….  ‘அமலாக்க’ முதலை அலேக்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில், தினமும் பரபரப்பாக பேசப்படும் துறை என்றால் அது அமலாக்கத்துறை தான்.

இந்த இடங்களில் சோதனை அந்த இடங்களில் சோதனை என்று அமலாக்கத் துறை பற்றிய செய்திகள் இடம் பெறாத நாட்களே கிடையாது.

அரசியல் எதிரிகளைப் பழி வாங்குவதற்காக மட்டுமே அமலாக்கத்துறை நாடு முழுவதும் மோடியின் ஏவலாளியாக வேலை பார்த்து வருகிறது என்று அத்தனை எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன. அடிப்படை முகாந்திரமே இல்லாமல் வழக்கு பதிவு செய்வதே அமலாக்க துறையின் வேலையாக உள்ளது. அமலாக்கத்துறை நடத்தும் வழக்குகளில் 10 சதவீதம் கூட குற்றம் நிரூபிக்கப்படுவதில்லை என்று உச்ச நீதிமன்றம் அடிக்கடி கண்டனம் தெரிவித்து வருகிறது.

இது ஒரு பக்கம் என்றால், அமலாக்கத் துறை அதிகாரிகள் எந்த அளவுக்கு இருக்கிறார்கள் என்பதை அடிக்கடி வெளிச்சம் போட்டு காட்டுகிறது அவர்கள் லஞ்சம் கேட்டு பிடிப்படும் சமாச்சாரங்கள்.

தமிழ்நாட்டில் கொஞ்ச காலம் முன்பு மதுரையில் ஒரு அமலாக்கத்துறை அதிகாரி 20 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டு சிக்கினார். இந்த மாதிரி நிறைய.

இந்த வரிசையில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருக்கிறார் அமலாக்கத்துறை இணை இயக்குனர் ரகுவன்சி.

ஒரிசா மாநிலத்தில் உள்ள ஒரு தொழிலதிபரிடம் சார் லஞ்சமாக கேட்டது கொஞ்சநஞ்சமல்ல, 5 கோடி ரூபாய்.

“உங்கள் இடங்களில் சோதனை நடத்தி வழக்கு பதிவு செய்துள்ளோம். நீங்கள் வியாபாரம் செய்ய முடியாத அளவுக்கு எல்லாவற்றிற்கும் சீல் வைத்து வங்கி முடக்கி விடுவோம்” என்று ஆரம்பித்திருக்கிறார் ரகுவன்சி.

” 2020 லிருந்து நடந்து கொண்டிருக்கும் இந்த பிரச்சனை எங்கே கொண்டு போய் விடுமோ என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் சொல்கிற ஆளை போய் பாருங்கள் அவர் கண்டிப்பாக உங்களுக்கு உதவி செய்வார்” என்று ரகுவன்சி ஒருவரை கையை காட்டினார்.

அவரின் பெயர், பஹடி.

உடனே தொழிலதிபர் போய் அந்த நபரை சந்தித்து பேசி இருக்கிறார். மேற்படி நபரும் திரும்பத் திரும்ப தொழிலதிபரை தொடர்பு கொண்டபடியே இருந்திருக்கிறார்.

இதில் டுவிஸ்ட் என்னவென்றால், பஹடி தொடர்பு கொண்டு பேசியது வேறு யாரையும் அல்ல, சாட்சாத் அமலாக்கத்துறை இணை இயக்குனரான ரகுவன்சியைத்தான்.

மொத்தமாக ஐந்து கோடி ரூபாய் கொடுத்தால் விஷயத்தை சுமுகமாக முடித்து விடலாம் அட்வான்ஸ் ஆக 50 லட்சம் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார் பஹடி.

முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்று முடிவுக்கு வந்த தொழிலதிபர் நேரடியாகவே ரகுவன்ஷியை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

பைனலாக 2 கோடி ரூபாய், அட்வான்ஸ் இருபது லட்சம் என பேசப்பட்டது.

ஒரு கட்டத்தில் தவறு செய்யாத நாம் எதற்கு 2 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் அப்படி கொடுக்க ஆரம்பித்தால் தொடர்ந்து பணம் பிடிங்கிக் கொண்டே இருப்பார்களே என்று தொழிலதிபருக்கு எச்சரிக்கை தட்டியுள்ளது.

அவர் உடனே சிபிஐ தொடர்பு கொண்டு புகார் சொல்ல, அவர்களும் அமலாக்கத்துறை இணை இயக்குனர் ரகுவன்சிக்கு அருமையாக பொறி வைத்தார்கள்.

மேற்படி தொழிலதிபரிடம் ஒடிஷாவின் புவனேஸ்வரில் 20 லட்சம் ரூபாய் வாங்க வந்தபோதுதான் நேற்று முன் தினம் கையும் களவுமாக சிக்கினார் அமலாக்கத்துறை உயர் அதிகாரி ரகுவன்சி.

2013 ஆம் ஆண்டு பேட்ச் IRS அதிகாரியான ரகுவன்சி, ஒரு ஆளிடமே 5 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார் என்றால் இதற்கு முன்பு யார் யாரிடம் எல்லாம் மிரட்டி எத்தனை கோடிகள் பிடுங்கி இருப்பார் என்றும் இப்போது தோண்ட ஆரம்பித்திருக்கிறது சிபிஐ.

-செய்தி பிரிவு