சென்னை: பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என வலியுறுத்திய மத்திய அமைச்சா் ராம்தாஸ் அத்வாலே விசிக தலைவர் திருமாவளவனுக்கும் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என கூறினார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை சென்னையின் முக்கிய பகுதியில் பட்டப்பகலில் ஒரு கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில், திமுக, அதிமுக, பாஜக கட்சிகளை சேர்ந்த பலர் சம்பந்தப்பட்டு உள்ளதால்,. இது அரசியல் கொலையாக கருதப்படுகிறது. இதனால், இந்த கொலை சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், இதை ஏற்க திமுக அரசு மறுத்து வந்ததுடன், திடிரென சரணமடைந்த முக்கிய குற்றவாளி ஒருவரை என்கவுண்டர் செய்ததது. இது மேலும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இந்திய குடியரசு கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே சென்னைக்கு வருகை தந்து, படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் அயனாவரத்தில் உள்ள இல்லத்துக்கு சென்றார். அங்கு ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய அவா், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி உள்ளிட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
பின்னா், செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்த கொலை வழக்கில் தொடா்புடையவா்களாக சிலரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ஆனால், கைது செய்யப்பட்டவா்களின் பின்னால் யாரோ முக்கிய நபா்கள் இருக்கின்றனா். அவா்கள்தான் இக்கொலைக்கு திட்டம் தீட்டிகொடுத்துள்ளனா். இதனால், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
மேலும், சம்பவம் நிகழ்ந்தபோது ஆம்ஸ்ட்ராங்கிடம் ஆயுதம் ஏதும் இல்லை என்ற தகவலை கொலையாளிகளுக்கு தெரிவித்தது யாா்? ஆம்ஸ்ட்ராங்கின் மெய்க்காப்பாளருக்கு தொடா்புடைய யாரோ ஒருவா்தான் இந்தத் தகவலை கொலையாளிகளிடம் தெரிவித்திருக்கக் கூடும் என பொற்கொடி சந்தேகம் எழுப்புகிறாா்.
இதனால், இக்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் கடிதம் மூலமும், நேரடியாகவும் வலியுறுத்தவுள்ளேன்.
தமிழகத்தில் தலித் தலைவா்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதனால், திருமாவளவன் உள்பட முக்கிய தலித் தலைவா்களுக்கு தமிழக முதல்வா் பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும், இவ்வழக்கு தொடா்பாக விரிவான விசாரணையை சென்னை மாநகர காவல்துறை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.