கார்த்திக் & சிதம்பரம் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை ஏன்?

Must read

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி ஆகியோரின் சென்னை வீடு மற்றும் அவர்கள் தொடர்புடையை இடங்களில் சி.பி.ஐ. இன்று காலை முதல் சோதனை நடந்து வருகிறது. இது இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

“இது அரசியல் பழிவாங்கல்” என்று காங்கிரஸ்  தரப்பில் கூறப்படுகிறது. அதே நேரம் அதிகாரிகள் மட்டத்தில் வேறு சில தகவல்கள் சொல்லப்டுகின்றன. இது குறுத்து  விவரம் தெரிந்த வட்டாரங்களில் விசாரித்தோம். அவர்கள் சொல்வது இதுதான்:

“காரணம் 1:

இந்திய சட்டதிட்டங்களை மீறி வெளிநாடுகளில் முதலீடு செய்தது, வரிஏய்ப்பு உள்ளிட்ட புகார்களை அடுத்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து தற்போது சிபிஐ சோதனை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

பிரபல தொழிலதிபர், இந்திராணி முகர்ஜியின் நிறுவனமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் நியூஸ் எக்ஸ், 9X மற்றும் 9X Music ஆகிய சேனல்களை நடத்தி வருகிறது.

இந்த நிறுவனத்துக்கு வெளிநாட்டிலிருந்து பெரும் முதலீடு வந்தது. ஆனால் 4 கோடி ரூபாய் மட்டுமே வந்ததாக கணக்கு காட்டப்பட்டது.  இதற்கு, “வெளிநாடு முதலீடு வளர்ச்சி வாரியம்” அனுமதியும் வழங்கியுள்ளது. இந்த அனுமதியை பெற்றுத்தர அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உதவியதாகவும், இதற்காக ரூ.90 லட்சம் கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளது அமலாக்கத்துறை.

சிதம்பரம் – கார்த்தி

காரணம் 2:

ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கிய விவகாரத்தில், அந்நிய  செலாவணி நிதிப் பரிவர்த்தனை முறைகேடு நடந்ததாக ஏற்கெனவே அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உட்பட ஆறு பேருக்கு எதிராக டில்லி சிபிஐ நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த விவகராத்திலும் ப.சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்படுகிறது. அதாவது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.4 ஆயிரம் கோடியை முதலீடு செய்வதற்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் ஒப்புதலைக் கடந்த 2005 ஆம் ஆண்டு மேக்சிஸ் நிறுவனம் கோரியிருந்தது. ஒப்புதல் தர வேண்டிய இந்த வாரியத்துக்கு நிதி அமைச்சராக இருப்பவர்தான் தலைவர். அப்போது நிதி அமைச்சராக இருந்தவர் ப. சிதம்பரம். மேக்சிஸ் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று உடனடியாக, அவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்பட்டது.

மேக்சிஸ் நிறுவனத்தின் ஒப்புதல் நிலுவையில் இருந்த நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் திடீரென சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த விலைக்குக் கைமாறின. அதன் பின் கடந்த 2006 ஆம் ஆண்டு மேக்சிஸ் நிறுவனம் முதலீட்டுக்கு ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்த நிலையில், இந்தப் பங்குகளும் பெருந்தொகைக்கு விற்பனையாயின. இப்படியாகக் கடைசி நேரத்தில் ஏர்செல் பங்குகள் குறைந்த விலைக்குக் கைமாறியதே ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு என்று அப்போதே சில செய்திகள் கசிந்தன.

இவ்வழக்கின் திடீர் திருப்பமாக, ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் ஆதாயமடைந்தது தொடர்பான விசாரணைக்கு வருமாறு கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கப் பிரிவு திடீரென சம்மன் அனுப்பியது.

இதனையடுத்து, அமலாக்கத்துறை அனுப்புள்ள சம்மனை ரத்து செய்யக் கோரி, கார்த்தி சிதம்பரம் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் கடந்த 2015 டிசம்பர் 2ல் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

வாசன் ஐ கேர், அட்வாண்ஸ் ஸ்ட்ரேட்டஜிக் ஆகிய நிறுவனங்களிலும் சோதனை நடந்தது.

இவைதான் முக்கிய காரணங்கள்.

இந்த சோதனை குறித்து இன்று மாலை அதிகாரபூர்வாக சி.பி.ஐ , அறிக்கை அளிக்கும் என கூறப்படுகிறது.

 

More articles

Latest article