சென்னை: ஓய்வுபெற்ற காவல்துறை ஐஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் இன்று அதிகாலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்தவர் பொன் மாணிக்க வேல். கடந்த 1989-ஆம் ஆண்டு குரூப் 1 அதிகாரியாக தேர்ச்சி பெற்று தமிழக காவல்துறையில் நேரடியாக டிஎஸ்பியாக பணியில் சேர்ந்தவர் பொன் மாணிக்கவேல் . பின்னர் 1996-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று சேலம் மாவட்ட எஸ்பி, உளவுப்பிரிவு டிஜஜி, சென்னை மத்திய குற்ற பிரிவு இணை ஆணையர், ரயில்வே மற்றும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி என பல பதவிகளில் இருந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி ஓய்வு பெற்றார். சமீப காலமாக ஆன்மிக அமைப்புகள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழகத்தில் உள்ள கோவில்களை நிர்வகிக்கும் அறநிலையத் துறையினர், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகச் சாடி வருகிறார்.
இதற்கிடையில் பொன்மாணிக்க வேல்மீது முன்னாள் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) காதர் பாட்சா என்பவர், கோவில் சிலைகளை கொள்ளையடித்து, வியாபாரி தீனதயாளன் மூலம், 15 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார் என கூறியிருந்தார். இதுகுறித்த வழக்கை விசாரணை நடத்தி வந்த சென்னை உயர்நிதிமன்றம், இந்த குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணையை நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை நீலாங்கரை பாலவாக்கம் காமராஜர் சாலையில் வசிக்கும் பொன் மாணிக்கவேல் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையானது அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே தன்மீதான வழக்குகள் குறித்து கூறிய பொன்மாணிக்க வேல், நான் கடந்த 2017-ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு ஐ.ஜி.யாக இருந்தபோது, பணியில் இருந்த 5 போலீசார் துப்பாக்கிமுனையில் சிலைகளை கொள்ளையடித்த வழக்கை பதிவு செய்தோம். இந்த வழக்கில் 47 பக்கத்தில் ஆரம்பநிலை அறிக்கையை டி.எஸ்.பி. நடராஜன் கொடுத்தார். அவர் நேர்மையான அதிகாரி. தற்போது சி.பி.ஐ. பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆர். குற்றவாளிகள் பட்டியலில் எனது பெயரோ, அவரது பெயரோ தெய்வ சத்தியமாக இல்லை. அப்படி வந்த செய்தி தவறானது. ஒரு லட்சம் மடங்கு பொய்யானது.
சுபாஷ் கபூர் என்ற அமெரிக்க குற்றவாளியை நான் விட்டுவிட்டேன் என்று காதர் பாட்ஷா கோர்ட்டில் மனு அளித்திருக்கிறார். தீனதயாளன் என்பவரையும் விட்டுவிட்டேன் என்று இன்னொரு குற்றச்சாட்டையும் கூறியிருக்கிறார்.
தீனதயாளன் 1958-ம் ஆண்டில் இருந்து மும்பை வழியாக சாமி சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி வந்தார். அவரை சி.பி.ஐ., சி.பி.ஐ.டி.யோ, வெளிநாடு போலீசோ கைது செய்யவில்லை. நான்தான் அவரை கைது செய்தேன். அவரது வீட்டில் இருந்து 831 சாமி சிலைகளை மீட்டேன். அவரது வீட்டில் நான் 30 நாட்கள் விசாரணை நடத்தினேன். 90 நாட்கள் சிறையில் அடைத்தேன். நான் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும், இந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. தீனதயாளனை நான் விடுவித்துவிட்டேன் என்று சொல்வது நியாயமா?
பழவூரில் நடந்த சிலை கடத்தல் வழக்கில் அவரை நான் அப்ரூவராக எடுத்தேன். அப்ரூவராக எடுத்ததால் குற்றவாளியை விடுவித்துவிட்டேன் என்று சொல்கிறார்கள். சட்டமே அப்படி விட வேண்டும் என்று சொல்கிறது. சிலை கடத்தல் வழக்கில் பிச்சைமணி என்பவரை நாங்கள் அப்ரூவராக எடுத்தோம். அவர் சொன்ன சாட்சியத்தின் அடிப்படையில்தான் சுபாஷ் கபூருக்கு தற்போது 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரி அசோக் நடராஜனுக்கு அஸ்லேட்டரி பதவி உயர்வு கொடுத்திருக்க வேண்டும். அதாவது, அவர் பணியில் இருந்து ஓய்வுபெற்றாலும் எஸ்.பி.யாக கவுரவிக்க வேண்டும். அவர் எனக்கு தொலைபேசியிலாவது நன்றி சொல்லி இருக்கலாம். ஆனால் சொல்லவில்லை.
நான் மரணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய மரணத்துக்குள் சாமி சிலைகள் திருட்டுப்போகாமல் பாதுகாக்க வேண்டும். கோவில்களை காப்பாற்ற வேண்டும். அர்ச்சகர்களை பாதுகாக்க வேண்டும். 3 லட்சத்து 50 ஆயிரம் சிலைகளை பதிவு செய்ய வேண்டும். இதுதான் எனது கடமை.
கோவில்களை காப்பாற்ற வேண்டும். ஏனென்றால், கோவிலே திருடப்பட்டுள்ளது. அதை அடுத்த வாரம் ஆதாரத்துடன் சொல்கிறேன். சேர, சோழ, பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட 2 ஆயிரத்து 500 சாமி சிலைகள் நம் நாட்டில் உள்ள அருங்காட்சியகங்களில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது வருத்தமாக உள்ளது.
சுபாஷ் கபூரை கைது செய்ததால் இந்திய-ஜெர்மன் நாட்டின் உறவில் உரசல் வந்தது உண்மைதான். அதற்கு நான்தான் காரணம். ஏனென்றால், ஜெர்மனியில் தங்கி இருந்த அவரை ஒரு வழக்குக்காக அழைத்துவந்தோம். ஆனால் அவர் மீது 4 வழக்குகளை பதிவு செய்தோம். தற்போது எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.