டில்லி:
அரசியல் சார்ந்த வழக்குகளில் சிபிஐ விசாரணை வலுவிழந்து வருகிறது என்றும், அரசியல் தலையீடு இல்லாத வழக்குகளில் சிபிஐ சிறப்பாக பணியாற்றி வருகிறது. அது ஏன் என்று உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கேள்வி எழுப்பி உள்ளார்.
சிபிஐ அமைப்பை உருவாக்கிய டி.பி.கோலியை நினைவுகூறும் கருத்தரங்கில் தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது, சிபிஐ செயல்பாடுகள் குறித்து விமர்சித்த தலைமைநீதிபதி, அரசியல் தலையீடு மற்றும் சமூகத்தில் உள்ள மிகப்பெரிய நபர்கள் தொடர்பான வழக்குகளில் சிபிஐ அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தவில்லை என்பது எதார்த்தமான உண்மை என்று கூறியவர், ஆனால், இதுபோன்று அடிக்கடி நடப்பதில்லை என்று ஆறுதலாகவும் கூறினார்.
மேலும், சில வழக்குகளில் சரியான தீர்ப்பு கிடைக்காத சமயங்களில், சிபிஐ விசாரணையில் உள்ள குறைபாடுகள் வெளியில் தெரிய வரும் என்றும் கூறியவர், இது, சிபிஐ.யின் நம்பிக்கையையும், கட்டமைப்பையும் பாதித்துவிடும், என்றவர், சிபிஐ அமைப்பில் உள்ள நிறை மற்றும் குறைகளை எடுத்துரைப்பதால் எவ்வித மாற்றமும் நிகழப்போவதில்லை என்றும் நறுக்கென்று கூறினார்.
அரசியல் தலையீடு சார்ந்த வழக்குகளில் சிபிஐ நீதித்துறையின் விசாரணைக்கு ஏற்றபடி வழக்கு களை வலுப்படுத்த முடியவில்லை என்பது உண்மைதான் என்றாலும், அரசியல் தலையீடு இல்லாத வழக்குகளில் மட்டும் சிபிஐ சிறப்பாக செயல்படுகிறது. இது எப்படி? என்று அவர் கேள்வி யெழுப்பியவர், சிபிஐ விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு தனது கடமையை ஆற்ற வேண்டும், நீதியை நிலைநாட்டும் வகையில் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.