சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம், அதனால் ஏற்பட்ட கலவரத்திற்கு காவல்துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் பொறுப்பு என்று குற்றம் சாட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இந்த வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், கடந்த ஜூலை 11ம் தேதி திமுக அரசின் ஒத்துழைப்போடு ஓபிஎஸ் மூலம் அராஜகம் நடைபெற்றது. அதிமுக தொண்டர்கள் கோயிலாக வணங்கும் தலைமை அலுவலகம் சேதப்படுத்தப்பட்டது. சட்டம் அனைவரும் பொதுவாக இருக்க வேண்டும். ஆனால் திமுக ஆட்சியில், பாரபட்சமாக அதிமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது என்றார்.
தொடர்ந்து பேசியவர், கள்ளக்குறிச்சி மாணவி மரணம், வன்முறை தொடர்பாக தமிழக அரசு, குழு மேல் குழுவா விசாரணை குழு அமைத்து வருகிறது. இவ்வாறு அமைப்பதால் குழப்பங்கள்தான் அதிகரிக்கும் என்றவர், ஒரு தாயின் நியாயமான கேள்விகள், கோரிக்கைகளுக்கு திமுக அரசுக்கு பதிலளிக்க வழியில்லை என்று சாடியவர்,
திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் சட்டம் ஒழுங்கு பாழாகிவிடும். அதைதான் நீதிமன்றம், தமிழகம் அமைதிப்பூங்கா என்ற பெயரை புரட்டிப்போட்டுவிட்டது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் காவல்துறை அரசின் கட்டுப்பாட்டில் இல்லையா என்று கருத்து தெரிவித்துள்ளது. இது யாருக்கு ஏற்பட்டுள்ள அவமானம் என்று விமர்சித்தவர், கள்ளக்குறிச்சி விவகாரத்தில், ஆளுங்கட்சிக்கு விருப்பு, வெறுப்பு இல்லையென்றால், சிபிஐ விசாரணை நடத்துவதில் என்ன பிரச்னை என கேள்வி எழுப்பியவர், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அரசு ஏன் தயங்குகிறது என்றும், இந்த வழக்கில் உண்மை நிலையை கண்டறிந்து நாட்டு மக்கள் முன் உரியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியவர், இந்த விவகாரத்தில், அரசு, அதிகாரிகளை, மாவட்ட நிர்வாகிகளை மாற்றுவதில் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை என்றும் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சியில் நடந்ததுபோல் இதுவரை ஒரு கலவரம் வந்து யாருமே பார்த்திருக்கவே முடியாது என்றவர், அந்த அளவுக்கு ஒரு கலவரம் வந்திருக்கிறது என்றால், அதற்கு முழு பொறுப்பேற்க வேண்டியது, திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின். இது உள்துறையை கையில் வைத்திருக்கின்ற ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ள அவமான மாகத்தான் நாம் கருத வேண்டும். அவர் உள்துறையை யாருக்காவது கொடுத்தால் நன்றாக இருக்கும், ஆனால் அவர் கொடுக்கமாட்டார். உண்மையாகவே அப்படி யிருந்தால், அந்த துறையின் அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்.
தொடர்ந்து திமுக அரசு சொத்து வரி உயர்த்திய போதே அதிமுக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. இப்போது மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. விரைவில் பேருந்து கட்டணம் உயரும். கட்டண உயர்வை திருத்தி அமைப்பு, மாற்றம் என்று கூறி திமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது.
இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.