டில்லி
வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக யுனியன் வங்கியின் முன்னாள் பெண் தலைமை அதிகாரி அர்ச்சனா பார்கவா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
பல வங்கிகளில் அதிகாரியாக பணியாற்றியவர் அர்ச்சனா பார்கவா. இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் துணை பொது மேலாளர் ஆகவும் பிறகு பொது மேலாளர் ஆகவும் 2044 முதல் 2011 வரை பணி ஆற்றினார். அதன் பிறகு செண்டிரல் வங்கியில் 2011 முதல் 2013 வரை விசேஷ இயக்குனராக பணி புரிந்தார். கடந்த 2013 ஏப்ரல் மாதம் முதல் 2014 பிப்ரவரி வரை யூனியன் வங்கியின் தலைவராகவும் நிர்வாக இயக்குனராகவும் பதவி வகித்தார்.
கடந்த 2016ஆம் வருடம் செப்டம்பர் மாதம் இவர் மீது எழுந்த புகாரை ஒட்டி சிபிஐ இவருக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை இட்டது. அப்போது ரொக்கப் பணம், நகைகள், முதலீடு பத்திரங்கள் உட்பட ரூ. 10 கோடிக்கும் மேற்பட்டவை கிடைத்தன. இவை அனைத்தும் அர்ச்சனா வங்கி அதிகாரியாக இருந்த போது பல நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதற்காக பெறப்பட்ட லஞ்சம் என கண்டறியப்பட்டது. இந்த லஞ்சத்தை அவர் கணவர் மற்றும் மகன் நடத்தி வந்த தனியார் நிறுவனம் மூலம் பெற்றதும் கண்டு பிடிக்கப்பட்டது.
இதையொட்டி அவர் மீது வழக்கு பதிந்து சிபிஐ மேலும் விசாரணை நடத்தியது. அந்த விசாரணையின் போது அவர் தனது வருமானத்தை விட 133% அதிகம் சொத்து சேர்த்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. இவை அனைத்தும் அவர் வங்கி அதிகாரியாக பணி புரிந்த 2004-2013 வரையிலான கால கட்டத்தில் வாங்கப்பட்டவைகள் ஆகும். அதை ஒட்டி வருமானத்த்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக அர்ச்சனா பார்கவா மிது வழக்கு பதிந்துள்ளது.