டெல்லி

சிபிஐ நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

கடந்த மே மாதம் 5 ஆம் தேதி எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. நாடெங்கும் சுமார் 25 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4 ஆம் தேதி வெளியானது.

நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பீகார் தலைநகர் பாட்னாவில் சில தேர்வு மையங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. நீட் தேர்வில் 1,563 மாணவ-மாணவிகளுக்கு கூடுதலாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. 6 தேர்வு மையங்களில் தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட குறைவான நேரமே ஒதுக்கப்பட்டதாக கூறி 1,563 மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.

சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 67 மாணவ-மாணவிகள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றனர். இவர்களில் 6 பேர் அரியானாவின் பரிதாபாத் நகரில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பது தெரியவந்தது. எனவே நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதா? என்ற சந்தேகம் எழுந்தது. எனவே இந்த நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வருகிறது.

நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மத்திய அரசு ஒப்புக்கொண்டு வினாத்தாள் கசிந்த சம்பவம் தொடர்பாக பீகார் காவல்துறைய்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்ற நிலையில் மே 6ம் தேதி மொத்தம் 13 பேரை பீகார் காவல்துறை கைது செய்து இந்த வழக்கில் கைது நடவடிக்கை தொடர்ந்து நீடித்து வருகிறது.

நேற்று இளநிலை நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. சிபிஐ, மத்திய கல்வி அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.