டெல்லி:
ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எம்.பி சசிகலா புஷ்பா உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு அளித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக.வில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி. சசிகலா புஷ்பா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 

இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை இன்று சசிகலா புஷ்பா திடீரென சந்தித்தார். ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு அளித்தார். மனு பெற்றுக் கொண்ட ராஜ்நாத் சிங் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு தான் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தார். அதே சமயத்தில சசிகலா புஷ்பாவின் இந்த சந்திப்பு அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஜெயலலிதா அரசை பாஜ ஆட்டிப்படைப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் சசிகலா புஷ்பாவின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படட் சிகிச்சை விபரங்களை வெளியிட வேண்டும் என்று நடிகை கவுதமி பிரதமர் மோடியிடம் மனு அளித்திருந்தார்.
மேலும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்களை தெரிவிக்குமாறு அப்பல்லோ மருத்துவமனைக்கும், தமிழக அரசுக்கும் மத்திய அரசு இன்று மதியம் உத்தரவிட்டிருந்தது.
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேறக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த பதவியை ஏற்க தடை விதிக்க வேண்டும் என்று சசிகலா புஷ்பா எம்.பி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த சூழ்நிலையில் சசிகலா ஆர்கே நகரில் போட்டியிட்டு முதல் அமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என தமிழக அமைச்சர் உதயகுமார் உள்பட 3 பேர் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவிற்கு அடுத்தடுத்து சோதனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
 
 
 
Sasikala Pushpa seeks CBI enquiry on Jayalalitha’s death. Submits Memorandum to Union Home Minister Rajanath Singh.