கொல்கத்தா
சட்டவிரோதமாகத் தனது மகளை அரசு பணியில் அமர்த்தியதற்கு மேற்கு வங்க அமைச்சரிடம் சிபிஐ விசாரணை நடத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திருணாமுல் மற்றும் மத்திய பாஜக அரசுக்கு இடையே மோதல் வலுவாகி வருகிறது. மேற்கு வங்க அமைச்சர்கள் மீது சிபிஐ வழக்குகள் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் மேற்கு வங்க கல்வித்துறை இணையமைச்சர் பரேஷ் சந்திர அதிகாரி மீது குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.
பரேஷ் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அரசு உதவி பெறும் பள்ளியில் தனது மகள் அங்கிதாவை சட்ட விரோதமாக ஆசிரியர் பணியில் அமர்த்தி உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்ததால் கொல்கத்தா உயர்நீதிமன்றம் சங்கீதாவைப் பணி நீக்கம் செய்து அவரது ஊதியத்தை அரசுக்குத் திருப்பித் தர உத்தரவு இட்டது.
இது குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நேற்று அமைச்சரிடம் 3 ஆம் நாளாகப் பல மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளது. அமைச்சர் அங்கீதாவை பணியில் அமர்த்த யாரிடம் எல்லாம் தொலைப்பேசி மூலம் பேசினார் என்பது குறித்து மேலும் விசாரணை நடத்த உள்ளது. அங்கீதாவிடமும் அடுத்த வாரம் விசாரணை நடைபெற உள்ளது.