டில்லி:
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதே வேளையில், சிபிஐ தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ப.சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் முன்ஜாமின் மனுவை நேற்று டில்லி உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ப.சி கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியது. அதற்கேற்றால் போல் அவரது வீடு காவல்துறை அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டது.
இந்த நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்ஜாமீன் கோரி சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ரமணா விசா ரணைக்கு ஏற்றார். அப்போது, ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், சல்மான் குர்ஷித், விவேக் தன்கா ஆகியோர் ஆஜராகினர். அப்போது வாதிட்ட அவர்கள், இந்த வழக்கு விசாரணைக்காக எட்டு முறை ஆஜராகி விளக்கமளித்துள்ளோம். அப்படி இருக்கும் போது தலைமறைவாக வேண்டிய அவசியம் இல்லை என்று மனுவில் குறிப்பிட்டனர். ஆனால் சி.பி.ஐ தரப்பிலோ சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ப.சிதம்பரம் ஜாமின் மனு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை. இந்த மனுவை தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்கிறேன் என்று கூறி தலைமை நீதிபதியின் அமர்வுக்கு மாற்றினார்.
இதையடுத்து, இந்த வழக்கை உடனே விசாரிக்க தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. ஆனால், தற்போது, அயோத்தி வழக்கு விசாரணை நடைபெற்றுவருவதால் உடனடியாக அந்த மனுவை விசாரிக்க முடியாது. பிற்பகல் 1 மணிக்கு முன்ஜாமீன் கோரி முறையிடலாம் என்று கூறியு ள்ளார்.
அதன்படி இந்த வழக்கு ஒருமணிக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மனுவை தலைமை நீதிபதி விசாரிக்க முன்வராவிட்டால், நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்படுகிறது.
இதற்கிடையில் சிபிஐ தரப்பில் உச்சநீதி மன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், எங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் ப.சிதம்பரம் முன்ஜாமின் மனுமீது எந்தவித உத்தரவு எதுவும் பிறப்பிக்க கூடாது ‘சிபிஐ கோரிக்கை வைத்து உள்ளது.
இதன் காரணமாக உச்சநீதிமன்றத்திலும் சிதம்பரம் மனு தள்ளுபடியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.