டெல்லி: ரியல் எஸ்டேட், பங்கு பரிவர்த்தனை விவரங்களை சேர்க்க, திருத்தப்பட்ட படிவம் 26ASசை மத்திய நேரடி வரிகள் விதிப்பு வாரியம் அறிவித்துள்ளது.
திருத்தப்பட்ட படிவம் 26ASசில் கழிக்கப்பட்ட அல்லது வசூலிக்கப்பட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் இப்போது சொத்து மற்றும் பங்கு பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை சேர்க்கலாம்.
இதன் மூலம் படிவம் 26AS வருடாந்திர தகவல் அறிக்கைக்கு மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அதாவது, இது டி.டி.எஸ் , டி.சி.எஸ் விவரங்களைத் தவிர, இப்போது குறிப்பிட்ட நிதி பரிவர்த்தனைகள், வரி செலுத்துதல், கோரிக்கை, பணத்தைத் திரும்பப் பெறுதல் மற்றும் நிலுவையில், நிறைவு செய்யப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விரிவான தகவல்களைக் கொண்டிருக்கும்.
இதைச் செயல்படுத்த, 2020-21ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், வருமான வரிச் சட்டத்தில் புதிய பிரிவு 285BB ஐ அறிமுகப்படுத்தியது. இந்த புதுப்பிக்கப்பட்ட படிவமான 26AS ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய நேரடி வரிகள் விதிப்பு வாரியம் அறிவித்துள்ளது.
இந்த புதிய நடைமுறையின் மூலம், வரி செலுத்துவோர் செலுத்தும் வரி, நிலுவையில் உள்ள விவரங்கள் மற்றும் நிறைவு செய்யப்பட்ட வருமான வரி நடவடிக்கைகள், வருமான வரி கோரிக்கையின் நிலை மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுதல் பற்றிய விரிவான தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.
அனைத்து தகவல்களும், விவரங்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால், வருமான வரித்துறை அதிகாரிகள் மதிப்பீட்டைச் செய்வதற்கும் வரி செலுத்துவோருடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் இருக்க இது உதவும்.
படிவம் 26ASஸ் என்பது வருடாந்திர ஒருங்கிணைந்த வரி அறிக்கையாகும். இது வரி செலுத்துவோர் தங்கள் நிரந்தர கணக்கு எண்ணான பான் எண்ணை யன்படுத்தி வருமான வரி இணையதளத்தில் இருந்து பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.