டில்லி

பணமதிப்பிழப்பு நேரத்தில் நடந்ததாகக் கண்டறியப்பட்ட வரி முறைகேடு கணக்குகளை முடிக்க வருமான வரித்துறைக்கு மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் 2 மாதம் அவகாசம் அளித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி அன்று பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்படி அதிக மதிப்பிலான நோட்டுக்களான ரூ.1000 மற்றும் ரூ. 500 ஆகியவை செல்லாதவை ஆகின. இந்த நோட்டுக்களை மாற்ற சாமானிய மக்கள் பெரிதும் துயருற்றனர். ஆனால் பலர் வங்கிக் கணக்குகளில் இதை மாற்றிக் கொண்டனர். புழக்கத்தில் இருந்த நோட்டுக்கள் திரும்ப ரிசர்வ் வங்கிக்கு வந்து விட்டதாகக் கூறப்பட்டது.

இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு அளிக்கப்பட வருமான வரிக்கணக்குகள் அனைத்தும் சோதனை இடப்பட்டன. இதில் சுமார் 87000 கணக்குகள் சந்தேகம் உள்ளதாகக் கூறப்பட்டது. இதனால் இந்த கணக்குகளை இந்த ஜூலை வரை வருமானவரித்துறை முடிக்காமல் வைத்துள்ளது. இந்த கணக்குகள் குறித்து விசாரணைகள் நிலுவையில் உள்ளதால் வருமான வரித்துறை நேரடி வரி விதிப்பு வாரியத்துக்கு மேலும் அவகாசம் கோரியது.

இது குறித்து வருமான வரி கணக்கு அதிகாரிகள், “தற்போதுள்ள ஊழியர்கள் மற்றும் வேலைப்பளு காரணமாகப் பணமதிப்பிழப்பு நேர வருமான வரி முறைகேடு பற்றிய சோதனைகளை முழுமையாக முடிக்க இயலவில்லை. இது போன்ற குற்றச்சாட்டுடன் உள்ள கணக்குகளை விரைவாக முடிக்க இயலாது. மற்ற கணக்குகளைப் போல் அல்லாமல் இந்த கணக்குகளை முடிக்க அதிக நேரம் தேவையாக உள்ளது” என வாரியத்துக்கு அளித்த கோரிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்த கோரிக்கையை ஏற்ற நேரடி வரி விதிப்பு வாரியம் வருமானவரித்துறைக்கு இந்த கணக்குகளை முடிக்க மேலும் இரு மாத அவகாசம் கொடுத்துள்ளது.