பெங்களூர்:

காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி, கர்நாடக முதல்வரை சந்திக்க இருப்பதாக முதல்வர் எடப்பாடி அறிவித்திருந்தார்.

ஆனால், தமிழக முதல்வரை சந்திக்க இயலாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா மறுப்பு தெரிவித்து உள்ளார்.

தற்போது சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதால், சந்திக்க நேரம் இல்லை என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காவிரி நீரை நம்பியே டெல்டான பாசனப்பகுதி உள்ளது. தற்போது டெல்டா பகுதியில் விவசாயிகள் சம்பா பயிர் சாகுபடிசெய்துள்ளனர். பயிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராகும் வேளையில், தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகி வருகின்றன. இதன் காரணமாக பயிர்களை காப்பாற்ற எண்ணி, மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கர்நாடக முதல்வரை சந்திக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டு கடந்த 30ந்தேதி கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தில், “காவிரி தண்ணீர் விவகாரம் குறித்து சந்தித்துப் பேச விரும்புவதாகவும், தங்களை சந்திக்க  நேரம் ஒதுக்கி தர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்க கர்நாடக முதல்வர்  சித்தராமையா மறுத்து விட்டார்.

கர்நாடகாவில் பட்ஜெட் கூட்ட தொடர் நடக்க இருப்பதால், இப்போது சந்திக்க இயலாது என்று அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் இன்னும் 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை மீண்டும் கைப்பற்ற பாரதியஜனதா கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள காங்கிரசும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில் கடந்த வாரம், கர்நாடகா, கோவா இடையே உள்ள நதிநீர் பிரச்சினை குறித்து, மத்திய அரசுக்கு எதிராக கர்நாடக அமைப்புகள் பந்த் நடத்திய நிலையில், தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்க கர்நாடக அரசு மறுத்துவிட்டது.

தற்போதைய அரசியல் சூழலில், தமிழக முதல்வரை சந்தித்தால், அவர் வேண்டுகோளை ஏற்று,  காவிரியில் தண்ணீர் திறந்து விட்டால், கர்நாடக மாநில விவசாயிகளின் எதிர்ப்பை சந்திக்க வேண்டியதிருக்கும் என்றும், அதன் காரணமாக தேர்தலில் சந்திக்க நேரிடும் என்ற பயத்தின் காரணமாகவே, தமிழக முதல்வரை சந்திக்க கர்நாடக முதல்வர் சித்தராமையா சந்திக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர்,  தண்ணீர் கேட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெங்களூர் வந்தால் அவர் தலைமையிலான குழுவினரை நாங்கள் மனதார வரவேற்போம். அவரிடம் கர்நாடகத்தின் தற்போதைய நிலையைத் தெளிவாக எடுத்துரைத்து சொல்லி அனுப்பி வைப்போம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.