டில்லி:

காவிரி மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பில் தமிழகத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தமிழகத்திற்கு பாதகமான தீர்ப்பு வர காரணம் தமிழக அரசின் அலட்சியம் தான் காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு கடந்த  10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 21ம் தேதி முதல் காவிரி குறித்த மேல்முறையீட்டு  வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் வாரத்தில் மூன்று வேலை நாட்கள் வீதம் மொத்தம் 15 நாட்கள் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இன்றைய தீர்ப்பில், காவிரி நீர் பிரச்சினையில் எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என்று கூறிய உச்சநீதி மன்றம், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீரின் அளவை குறைத்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நிலத்தடி நீர் 10 டிஎம்சி அளவுக்கு இருப்பதால், காவிரி நீர் பங்கிட்டில் நீரின் அளவை குறைப்பதாக அறிவித்துள்ள உச்சநீதி மன்றம், தமிழகத்திற்கு குறைந்துள்ள நீர்ன் அளவை கர்நாடகாவுக்கு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பின்படி 205 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கர்நாடகா வழங்க வேண்டும் என்று கூறியிருந்த நிலையில், காவிரி நடுவர் மன்றம்  2007ம் ஆண்டு நீரின் அளவை குறைத்து 192 டிஎம்சி வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந் நிலையில்,  தற்போது நீரின் அளவை  177.25 என்று குறைத்துள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த நீரின் அளவில் இருந்து 14.75 டிஎம்சி அளவு குறைந்துள்ளது.

இந்நிலையில், இன்றைய தீர்ப்பு தமிழகத்திற்கு பாதகமாகவும், கர்நாடகாவுக்கும் சாதகமாகவும் வந்துள்ளது. இதை கர்நாடக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், கர்நாடகா சாதகமான தீர்ப்புக்கு அம்மாநில நீர்பாசனத் துறை அமைச்சர் எம்.பி. பட்டீலும் காரணமும் என்று கூறப்படுகிறது.

இந்த வழக்கில், கர்நாடக அரசு தரப்பில் மூத்த வக்கீல்கள் பாலி நாரிமன், எஸ்.எஸ்.ஜாவளி, மோகன் கர்த்தார்க்கி, ஷியாம் திவான் ஆகியோர் வாதாடினர்.

கடந்த ஆண்டு காவிரி மேல்முறையீடு வழக்கு உச்சநீதி மன்றத்தில்  விசாரணைக்கு வந்தது முதல் ஒவ்வொரு முறை விசாரணையின்போதும்,  கோர்ட்டில் அமர்ந்து வழக்கின் தன்மை குறித்து அறிந்து வந்தார். அதுபோல ஒவ்வொரு முறை வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பாக, கர்நாடகா சார்பாக வாதாடும் வழக்கறிஞர்கள் குழுவுடன் ஆலோசித்தும், அதுபோல விசாரணை முடிந்ததும், அன்றைய விசாரணை குறித்தும், அடுத்து நடைபெற உள்ள விசாரணை குறித்தும் ஆலோசனை செய்து, வழக்கறிஞர்களுக்கு தேவையான அறிவுரைகள்  கொடுத்து வந்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

விசாரணையின்போது  பாலி நாரிமனுக்கு தேவையான ஆதாரங்கள் மற்றும் விவரங்களை அவ்வப்போது தெரிவித்து வந்ததாகவும்,  ஒருசமயம் சுப்ரீம் கோர்ட்டில் காவிரி தொடர்பான  விசாரணையின்போது, நீதிபதிகளின் கேள்விக்கு சரியான முறையில் பதில் அளிக்க கர்நாடக வழக்கறிஞர் திணறியபோது, விசாரணையை கவனித்துக்கொண்டிருந்த கர்நாடக அமைச்சர் எம்.பி. பட்டீல், உரத்த குரலில், அதற்கான பதிலை எடுத்துரைத்தார். இது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் புருவத்தை உயர்த்த செய்தது.

அந்த அளவுக்கு மாநில பற்றுடன் செயல்பட்டு வந்த கர்நாடக மாநில நீர்பாசனத் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீலின் முயற்சி மற்றும் கர்நாடக அரசின் மக்கள் நலம் காரணமாகவே இன்றைய தீர்ப்பு கர்நாடகாவுக்கு சாதகமாக வந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தினத்தந்தி டில்லி செய்தியாளரான அரவிந்த் குணசேகரன், தனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

ஆனால், தமிழகத்திலோ, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு,  காவிரி வழக்கு குறித்து, தமிழக முதல்வரோ, அமைச்சர்களோ கவலைப்பட்டதில்லை. இன்றைய தீர்ப்புக்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஆட்சி என்று ஒன்று நடைபெறுகிறதா என்று எதிர்க்கட்சிகிள் மட்டுமின்றி  பொதுமக்களும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், தமிழக நீர்பாசனத்துறைக்கு அமைச்சர் யார் என்றே தெரியாத நிலையே இன்றும் நீடித்து வருகிறது.

உச்சநீதி மன்றத்தில்காவிரி வழக்கு நடைபெற்று வந்தபோது, வழக்கறிஞர்களின் சந்தேகங்களுக்கு சரியான முறையில் பதில் தெரிவிக்கவோ, ஆலோசனை கூறவோ தமிழக அரசோ, அமைச்சர்களோ முன் வராத நிலையில், பலமுறை வாய்தா கோரப்பட்ட நிகழ்வும் அரங்கேறியது.

இதுபோன்ற சூழ்நிலையில்தான் இன்று உச்சநீதி மன்றம் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீரை மேலும் குறைத்து உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக உரிமை மீண்டும் மீண்டும் பறிக்கப்பட்டு வருகிறது.

உச்சநீதி மன்றத்தின் இன்றைய தீர்ப்புக்கு காரணமாக தமிழக அரசுதான் காரணம், தமிழக அரசின் அலட்சியம் காரணமாகவே இன்று தமிழகத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது  என்று பொதுமக்களும், விவசாயிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர்.