திருச்சி:
காவிரி விவகாரத்தில் தமிழக்ததுக்கு அநீதி இழைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக திருச்சியில் இன்று காலை முதல் உண்ணாவிரதம் நடந்துவருகிறது.
தமிழகத்தின் மிகப்பெரிய குடிநீர் ஆதாரமாகவும், டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் விளங்குவது காவிரி நீர் ஆகும்.
ஆனால் தமிழகத்துக்கு உரிய பங்கை அளிப்பதில் கர்நாடக அரசு இழுத்தடித்து வருகிறது. தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம், கர்நாடக அரசு முறைப்படி தண்ணீர் திறந்து விடவேண்டும் என்றும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உத்தரவிட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முதலில் சம்மதித்த மத்திய அரசு பிறகு பின்வாங்கியது. இதனால் மத்திய அரசை எதிர்த்து தமிழகத்தில் அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன.
டெல்லியில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் பேரணியாக சென்று பிரதமர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். கடந்த 7-ம் தேதி தஞ்சையில் தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் அநீதி இழைக்கும் மத்திய அரசை கண்டித்தும், தமிழக விவசாயிகளின் நலன் காக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் திருச்சியில் இன்று காலை முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி உண்ணாவிரதம் நடத்தி வருகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், இந்த போராட்டத்துக்கு தலைமை வகிக்கிறார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி முன்னிலை வகிக்கிறார்.
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் வரவேற்றார்.
திருச்சி தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் இன்று காலை 9 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.
உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் குமரி ஆனந்தன், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி மற்றும் கராத்தே தியாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் யசோதா, டாக்டர் ஜெயக்குமார், டாக்டர் செல்லக்குமார், திருச்சி மாவட்ட தலைவர்கள் ஆர்.சி.பாபு (தெற்கு), ஜெயப்பிரகாஷ் (வடக்கு) மற்றும் முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
உண்ணாவிரத பந்தலில் திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் அமர்ந்திருக்கின்றனர். நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அமருவதற்காக நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது.