பெங்களூரு:

காவிரி வழக்கின் தீர்ப்பு குறித்து விவாதிக்க  வரும் 7ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு கர்நாடக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழக அரசு கடந்த 22ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி விவாதித்த நிலையில், கர்நாடக அரசும் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

காவிரி நீர் தொடர்பான மேல்முறையீடு வழக்கில், கடந்த 16ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்தற்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீரின் அளவை குறைத்து உத்தரவிட்டது. தமிழகத்திற்கு குறைக்கப்பட்ட தண்ணீரை பெங்களூர் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தவும் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் குறைக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், கடந்த 22ந்தேதி முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டப்பட்டடு,  காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்த பிரதமரை சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடகாவில் ஓரிரு மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா  வரும் 7-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என  அறிவித்துள்ளார்.

இதற்காக அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படு கிறது.